பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

461

பின்பு நீ உன் விருப்பப்படி அர்ச்சுனனோடு போர் செய்யலாம்” என்று கூறித் தன்னிடமிருந்த கவசத்தைத் துரியோதனனுக்கு அணிவித்தார் துரோணர். கவசமணிந்து கொண்ட துரியோதனன் அர்ச்சுனனோடு போருக்குச் சென்றான்.

8. சயத்திரன் சாகின்றான்

அதுவரை தன்னுடன் நேருக்கு நேர் போருக்கு வராத துரியோதனன் அன்று களத்தில் வந்து நிற்பதைக் கண்ட அர்ச்சுனனுக்கு வியப்பாக இருந்தது. ‘இவன் உண்மையில் தன் சொந்தத் தைரியத்துடன்தான் நம்மை எதிர்க்க வருகிறானா? அல்லது ஏதாவது பக்கபலம் பெற்று அதனால் வருகிறானா?’ என்று அர்ச்சுனன் கண்ணனைக் கேட்டான், “அர்ச்சுனா! உன் சந்தேகம் சரிதான். சொந்தத் தைரியத்தோடு அவன் உன்னை எதிர்க்க வரவில்லை. துரோணனால் அளிக்கப்பட்ட தெய்வீக சக்தி வாய்ந்த கவசமொன்று அவன் உடலை மூடியிருக்கிறது. அந்தத் தைரியத்தினால்தான் அவன் உன்னுடன் போருக்கு வந்திருக்கிறான். நீ செய்யவேண்டிய முதல் வேலை அந்தக் கவசத்தைப் பிளந்து எறிவதுதான்” என்றான் கண்ணன். துரியோதனனோடு கிருபன், அசுவத்தாமன், சகுனி முதலியவர்கள் அர்ச்சுனனை எதிர்த்தார்கள். முதலில் அவர்களை முறியடித்துத் துரத்திவிட்டு அதன் பின் துரியோதனனுடைய கவசத்தைப் பிளக்கும் முயற்சியில் இறங்கினான் அர்ச்சுனன். ஆனால் அவன் மேல் எத்துணையோ அம்புகளை எய்து பார்த்தும் அவற்றில் ஒன்றாவது அர்ச்சுனன் எதிர்பார்த்தது போல் கவசத்தைத் தீண்டவுமில்லை. பிளக்கவுமில்லை. கவசத்தில் மோதிய அம்புகள் முறிந்து முறிந்து கீழே விழுந்தன. தோல்வி அர்ச்சுனனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஏமாற்றம் பொறுக்க முடியாமலும் எப்படியாவது துரியோதனனுடைய கவசத்தைப்