பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

அறத்தின் குரல்

கொண்டிருந்தது. அவனுடைய வேதனை நிறைந்த நிலையை உணர்ந்த அர்ச்சுனன் அவனோடு மேலும் போர் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டான். சிறிது நேரம் தங்கி நின்ற கர்ணன் பின் மீண்டும் பழைய துணிவை அடைந்து சேர மன்னனோடு போரிட்டான்! போர்க்களத்தின் பிற பகுதிகளிலும் இருசாராருக்கும் போர் விறுவிறுப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது. சகுனி பாண்டிய மன்னனோடும், சகாதேவன் துச்சாதனனோடும் அசுவத்தாமன் வீமனோடும், கேகய மன்னன் சுகுதகீர்த்தியோடும், கிருத வன்மன் சிகண்டியோடும், துட்டத்துய்ம்மன் கிருபாச்சாரியனோடும் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். போரில் அழிந்தவர்களின் சடலங்களும் அறுபட்ட கைகால் உறுப்புக்களும் குருதியும் சிந்திக் கிடந்ததனால் அங்கங்கே கவந்தங்களும் கூளிப் பேய்களும் கூடித் தென்பட்டன. வெற்றிக்குத் தோல்வியா, தோல்விக்கு வெற்றியா என்று காணமுடியாதபடி இருந்த அந்தப் போர்க்களத்தின் நிலை பயங்கரமாக ஒழுங்கற்ற சோகத்தின் உருவத்தில் மூழ்கிக் கிடந்தது. அர்ச்சுனன் கைவில்லினால் சாவதற்கென்றே வரம் பெற்றவர்களைப் போல் எதிரிகள் மடிந்து கொண்டிருந்தார்கள். துரியோதனனுக்கு மிகவும் வேண்டிய வீரர்கள் பலரை விண்ணுலகுக்கு அனுப்பினான் அவன். மீதமிருந்தவர்கள் பயந்து துரியோதனன் இருந்த இடத்தை நோக்கி ஓடினர். தன்னுடைய எல்லாப் படைவீரர்களையும் அர்ச்சுனன் துரத்தி அடிப்பதைப் பார்த்த துரியோதனன், தானே ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு அவனை எதிர்க்க முன் வந்தான். ஆனால் துரியோதனனும் அவன் திரட்டிக் கொண்டு வந்த படைகளும் அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைவதற்குள்ளேயே நடுவில் தருமன் வந்து மடக்கிக் கொண்டான்.

தருமனுக்கும் துரியோதனனுக்கும் போர் ஏற்பட்டது. இருவரும் கடுமையாகப் போர் புரிந்தார்கள். ஒருவர் மேல் ஒருவர் ஆத்திரத்தோடு அம்புகளை ஏவிக்கொண்டார்கள். இருவர் படைகளிலும் குதிரைகளும், யானைகளும்,