பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/494

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
492
அறத்தின் குரல்
 

மட்டுமில்லை, ஒவ்வொரு கெளரவ வீரனிடமும் அந்திமகாலத்தின் நம்பிக்கையற்ற ஆசைச் சிதறல்கள் தெளிவில்லாத முறையில் குமுறிக் கொண்டிருந்தன. அந்தப் பதினாறு நாட்களாக ஏற்படாத குமுறல் அன்றைக்கு மட்டும் ஏற்படுவானேன்? முடிவு நெருங்கும் போது ஆற்றமாட்டாத இதயத்தின் அவலம் அப்படித்தான் குமுறுமோ, என்னவோ? துட்டத்துய்ம்மன், தருமன், வீமன், கண்ணன், அர்ச்சுனன் முதலியவர்களும் போருக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்களுக்கு எதிரே நின்று கொண்டிருந்த கெளரவ சேனையிலுள்ள ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு அரசனும் முதல்நாள் புறமுதுகு காட்டி அஞ்சி ஓடியவர்கள் தாம். ஆனாலும் வெட்கமின்றி மீண்டும் போருக்கு வந்திருக்கிறார்கள்.

“கண்ணா! உன்னை ஒன்று கேட்கிறேன், இந்த உலகத்தில் அறிய முடியாததும் ஏதாவது இருக்கிறதா? இந்தப் போர் இப்படியே எவ்வளவு நாளைக்குத்தான் நடந்து கொண்டிருக்கும்? என்றாவது ஒருநாள் முடிவு தெரிந்துதானே ஆகவேண்டும் இருபக்கமும் பதினாறு நாட்களாக எவ்வளவு உயிர்கள் மடிந்திருக்கும்? கர்ணனுடைய முடிவு எப்போதோ?” என்று தருமன் கண்ணனை நோக்கிக் கேட்டான். தருமனுடைய கேள்வியில் இலட்சியம் நிறை வேறத் தாமதமாகும் போது ஏற்படும் தயக்கமும் ஏக்கமும் தொனித்தன்.

“தளராதே தருமா! உன் ஆசை நிறைவேறும் காலம் நெருங்கி வந்து கொண்டுதான் இருக்கிறது. நாளைக்கு மறுநாள் அஸ்தினாபுரியின் அரியணையில் பாண்டவர்களின் ஏகப் பிரிதிநிதியாக நீ அரசு வீற்றிருக்கப் போகிறாய். இன்று போர் முடிவதற்குள் கர்ணனின் காலமும் முடிந்து விடும். அர்ச்சுனன் கைகளால் கர்ணனுக்குச் சாவு நேரும். நாளைக்குப் போர் முடிவதற்குள் வீமன் கைகளால் துரியோதனனுக்குச் சாவு நேரும்” கண்ணன் சிரித்துக் கொண்டே கூறினான். வெறும் சிரிப்பா அது? காலத்தையே வென்று கபளீகரம் செய்யும் சிரிப்பு அப்போது கண்ணன் சிரித்த சிரிப்பு.