பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

548

அறத்தின் குரல்

பெயர் வீமனில்லை. இது சாதாரணப் போரில்லை. ஒன்று இந்தப் போரில் நீ என்னைக் கொல்ல வேண்டும் அல்லது நான் உன்னைக் கொல்ல வேண்டும்” என்று கூறிக்கொண்டே போர் புரிந்தான் வீமன். பயங்கரமானதோர் காட்டில் இரண்டு பெரிய ஆண் சிங்கங்கள் ஒன்றோடொன்று கட்டிப் புரண்டு போர் செய்வது போல் தோன்றியது. கதாயுதமும் கதாயுதமும் மோதிக் கொண்டனவா? அல்லது மலையும் மலையும் மோதிக் கொண்டனவா? - என்று வியக்கத்தக்க விதத்தில் நடந்தது அந்தப் போர்.

போர் நடந்துகொண்டிருக்கும் போது துரியோதனன் ஒரு தந்திரம் செய்து வீமனின் உயிர்நிலை இருந்த இரகசியத்தை அறிந்து கொண்டான். “வீமா! நீ எவ்வளவு பெரிய வீரன்? உன்னுடைய உயிர்நிலை உடம்பில் எங்கே இருக்கிறதென்று சொல்லேன்; பார்ப்போம். எனக்குத் தெரிவதனால் ஒன்றும் கெடுதல் இல்லையே?” - என்று கேட்டான். இந்தக் கேள்வியின் வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத வீமன் சுபாவமாகத்தான் துரியோதனன் இப்படிக் கேட்கிறானென்று எண்ணிக் கொண்டு, “அதுவா? அது என் தலையில் இருக்கிறது” - என்று பதில் கூறிவிட்டான். பின்பு சிறிது நேரமானதும் வீமனுடைய தலையில் ஓங்கி ஓங்கி அடித்தான் துரியோதனன். உயிர் நிலையில் தொடர்ந்து அடி விழுந்தபோதுதான் துரியோதனனுடைய வஞ்சகம் புரிந்தது.

‘ஆகா! இவனிடம் நாம் ஏமாந்துவிட்டோமே. இவன் நம்மைத் தொலைப்பதற்காக அல்லவா உயிர்நிலையைப் பற்றி விசாரித்திருக்கிறான். சரி! இவன் பாடத்தை இவனிடமே திருப்பி படிப்போம்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, “துரியோதனா! என் உயிர்நிலை எங்கிருக்கிறது? என்பதைப் பற்றிக் கேட்டாய். உடனே பதில் கூறினேன். இப்போது நான் கேட்கிறேன். உன் உயிர்நிலை உடலின் எந்தப் பாகத்தில் இருக்கிறது சொல்?” - என்று கேட்டான் வீமன்.