பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

560

அறத்தின் குரல்


அசுவத்தாமன் அங்கிருந்து புறப்பட்டான். பாசறைக்கு வந்து கிருபாச்சாரியனையும், கிருதவன்மனையும், அழைத்துக் கொண்டு வியாசர் வசித்து வந்த ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். அப்படிச் செல்லும்போது அவன் மனம் ஒரேயடியாகக் குழம்பியிருந்தது.

அசுவத்தாமன் சென்றபின் மரணப்படுக்கையிலிருந்த துரியோதனன் சஞ்சயனைக் கூப்பிட்டு அனுப்பினான். சஞ்சயன் சமந்த பஞ்சகத்துப் பூஞ்சோலைக்கு வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனன் உணர்வு ஒடுங்கிப் போன மெல்லிய குரலில் சஞ்சயனிடம் கூறினான்:- “சஞ்சயா! இதோ இன்னும் சில விநாடிகளில் நான் இறந்து விடுவேன். இறப்பதைப்பற்றி எனக்குப் பயமில்லை. என்னுடைய சாவுக்காக மற்றவர்களும் கவலைப்படக் கூடாது. என்னைப்போல் வாழ்நாளெல்லாம் தீமையே வடிவாக வாழ்ந்த எவருக்கும் இப்படிப்பட்ட கேவலமான சாவுதான் கிடைக்கும். உயிர் மெல்லப் பிரிந்து கொண்டிருக்கும் இந்த அந்திம நேரத்தில்தான் நான் செய்த தீமைகளை எண்ணிக் கண்ணீர் விடுகிறேன். நான் எப்படி வாழ்ந்தேன்?’ என்பதும், ‘எப்படி வாழ்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்?’ என்பதைப் பற்றியும் இப்போது தான் சிந்திக்கிறேன். இனிமேல் சிந்தித்து என்ன பயன்? வாழப் போகிறவன் அல்லவா சிந்திக்க வேண்டும்? செத்துக் கொண்டிருப்பவன் சிந்தித்துக் கொண்டே செத்தால் என்ன? சும்மா செத்தால் என்ன? நீ எனக்கு ஓர் உதவி செய். அத்தினாபுரத்துக்குச் சென்று என் பெற்றோரிடம் என்னுடைய மரணச் செய்தியைச் சொல். நான் இறந்துவிட்டேனென்பதற்காக அவர்கள் அதிகமாகத் துயரப்படவேண்டாம்! நீ அவர்களுக்கு ஆறுதல் கூறு. “உங்கள் மகன் துரியோதனன் நிமிர்ந்த தலையுடன் வணங்காமுடி மன்னனாக அரசாண்டான். ஆனால் இப்போது குனிந்த தலையுடன் குற்றங்களை எண்ணி வினைகளின் சூட்டில் வெதும்பிச் சமந்தபஞ்சகத்துப்