பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72
அறத்தின் குரல்
 

போலக் காட்சியளித்தான் அவன். யாகசேனனது மனம் இந்தப் புதல்வனைக் கண்டு திருப்தியால் பூரித்தது. அவன் உபயாச முனிவரை வணங்கி நன்றி செலுத்தினான். ‘துரோணரைப் பழிவாங்கிக் கொள்வதற்குத் தகுதியான புதல்வன் பிறந்து விட்டான்’ என்று மகிழ்ச்சி வெறியால் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது அவன் மனம் புதல்வன் பிறந்ததற்காகக் கொண்டாடப் பெற்ற கொண்டாட்டம் அரண்மனையெங்கும் திருவிழாக் காட்சியை உண்டாக்கி யிருந்தது. மங்கல நிகழ்ச்சியைக் குறிக்கும் இன்னிசைக் கருவிகள் முழங்கின. ‘யாகசேனனுக்குப் புதல்வன் பிறந்துள்ளான்’ - என்ற நற்செய்தி அரண்மனைக்கு அப்பால் நாட்டு மக்களிடமும் களிப்பையும் ஆரவாரத்தையும் பரப்பியிருந்தது. புதல்வனுக்குத் ‘துட்டத் துய்ம்மன்’ என்று பெயரிட்டார்கள். இந்த நிலையில் யாகசேனன் உபயாச முனிவரை அணுகி மீண்டும் யாகத் தீயில் அமுதை இட்டு ஒரு பெண் மகளையும் தனக்கு அளிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொண்டான்.

முனிவர் வேள்விக் குழியில் மீண்டும் அமுதத்தை இடச் செய்தார். இந்த முறையும் இறைவன் அருள் துணை யாகசேனனுக்கு இருந்தது போலும்! முகில் கற்றைகளுக்கு இடையே வானில் மின்னும் மின்னலைப் போன்ற சிற்றிடையுடன் மதன கலைகளெல்லாந் திரண்ட வடிவழகு தன்னை அலங்கரிக்கத் திரெளபதி தீக் கொழுந்துகளுக்கு இடையே எழுந்து தோன்றினாள். அவளுடைய அழகிலே தெய்வீகம் கனிந்து இலங்கியது. வனத்திலே புதர் மண்டி வாளிப்பாகக் கருத்துச் செழிப்போடிருக்கும் பச்சை மூங்கில் போலப் பளபளக்கும் அழகான தோள்கள், சுழன்று மருளும் மான் விழிகள், மலர்வதற்கிருக்கும் வரிசையான முல்லை மொட்டுக்களைக் கோத்து வைத்தாற் போன்ற பல்வரிசை, திருமகளின் அழகில் எவ்வளவு கவர்ச்சி நிறைந்திருந்ததோ, அவ்வளவு கவர்ச்சி, காண்போர் வியக்குமாறு இத்தகைய தோற்ற நலங்களுடனே திரெளபதி வேள்விக் குழியிலிருந்து