பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
86
அறத்தின் குரல்
 

வாழ்க்கையும் கடும் இயல்புகளும் கொண்டு வாழ்ந்தவனின் தங்கை!” -என்று கூறி இழுத்துத் தயங்கி நிறுத்தினான் வீமன்.

இடிம்பி கண்ணீர் விட்டு அழுதாள். ஏமாற்றம் அவள் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. உடன் பிறந்தவனைப் பறி கொடுத்த துயரத்தை விட வீமனின் அன்பைப் பறி கொடுத்த துயரமே அவளைப் பெரிதும் வருத்தியது. அவள் குந்தியின் காலடியில் வந்து விழுந்தாள். தனக்குச் சரணளிக்குமாறு கெஞ்சினாள். குந்தி மனம் இரங்கினாள். தருமன் முதலிய சகோதரர்களும் இடிம்பியின் நிலைக்கு இரங்கினார்கள். சகோதரர்களும், குந்தியும் கூறிய பின் வீமன் இடிம்பியை ஏற்றுக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே அவளைக் காந்தர்வ விவாகம் புரிந்து கொண்டான். தருமனின் அனுமதி பெற்றே இந்த விவாகத்தை வீமனுக்குச் செய்வித்தாள் குந்தி.

இந்த மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்தவர் போல அன்று பகலில் வியாசமுனிவர் அவர்களைக் காண வந்தார், “இந்தக் காட்டில் இனி மேலும் தங்காதீர்கள்” என்று கூறி அவர்கள் சென்று தங்குவதற்கு வேறிடம் கூறினார் அவர். பாண்டவர்களும் குந்தி, இடிம்பி ஆகியவர்களோடு அவர் கூறிய இடத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். வியாசருக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள். புதிதாக அவர்கள் வந்த இடம் சாலிகோத்திர முனிவர் என்பவருடைய ஆசிரமம் இருந்த வேறோர் வனம் ஆகும். இந்த வனத்தில் அவர்கள் பல நாள் தங்கியிருந்தார்கள். வீமனுக்கு இடிம்பியிடம் கடோற்கசன் என்ற புதல்வன் ஒருவன் இந்த வனத்தில் பிறந்தான் மனம் ஒருமித்த காதலர்களாகிய வீமனும் இடிம்பியும் இங்கே ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது. ஆனால் மனோதிடம் வாய்ந்தவளாகிய இடிம்பி புதல்வன் கடோற்கசனின் அழகிய தோற்றத்தில் இந்தப் பிரிவை மறக்க முயற்சி செய்தாள். வீமன் விரும்பும்போது அவளை வந்தடைய உதவுவதாகக் கூறிவிட்டு இடிம்பியும் கடோற்கசனும் பிரிந்து சென்றனர். அவர்கள் பிரிவு வீமன் முதலியோர் மனத்தை வருத்தினாலும் தங்கள் கடமை