பக்கம்:மக்கட் செல்வம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சிறுவர்ப் பயந்த



கொண்டேதான் வந்திருக்கிறார்கள். மறுமையைப் பற்றிக் கவலைப்படாதவருக்கும்கூட இந்தப் பண்டைய அறிஞர் சொல்லியது உண்மையே யாகும். தத்தமக்குக் கான்முளைகள் இல்லையானால் அவர்கள் இறந்த பிறகு அவர்தம் பெயரைச் சொல்ல இந்த உலகில் தான் யார் இருக்கிறார்கள்? அவர்கள் வழிவழியே வாழையடி வாழையென வருகின்ற காரணத்தாலே தான் அவர்தம் குடிவழியில் முன்னொரு காலத்தில் இன்னார் இன்னார் இன்னின்ன வகையில் சிறக்க வாழ்ந்தார் எனப் பின் நெடுங்காலம் பேச வழியும் வகையும் வாய்ப்பும் உள்ளன. எனவே அவர்கள் மறைந்த பின்பும்-மறுமை வாழ்வு உற்ற பின்பும்-அவர்கள் தம் புகழை உலகில் என்றென்றும் மங்காமல் வாழ வைப்பவர்கள் அவர்தம் மக்களும் அவர் வழிவழி வரும் பிறரும் ஆவர். எனவே மறுமை வாழ்வை நம்பாதவர்களும் கூட பிறந்த உலகில் என்றென்றும் பெயரோடு வாழவேண்டுமானால் மக்கட் செல்வம் பெற்றே ஆக வேண்டும். இக்கருத்தையே வள்ளுவனார்

'தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்'

என அழகாக விளக்கிச் சென்றிருக்கின்றார். எனவே எவருக்கும் மக்கட் செல்வம் சிறந்தது. அதிலும் மறுமையில் நம்பிக்கை உடையவர்களுக்கு அச்செல்வம் அளிக்கும் பயன் பெரிது. எனவே குழந்தைச் செல்வத்தினைக் காட்டிலும் மக்களுக்கு நலன் தருவது நாட்டில் வேறொன்றும் இல்லை. அத்தகைய செல்வத்தைப் பெற்ற நீ நலமுறுக என வாழ்த்துகின்றேன்.

இருமையும் உதவும் இக்குழவிச் செல்வத்தைப் பற்றிப் பல புலவர்கள் பாராட்டிப் பேசியுள்ளதை உனக்கு அவ்வப்போது சொல்லி இருக்கிறேன். சங்ககாலச் சான்றோர் பலர் இச்செல்வத்தைப் பாராட்டி இருப்பதை முன்னரே சில கடிதங்களில் எழுதியுள்ளேன்.