பக்கம்:மக்கட் செல்வம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

சில திங்களுக்குமுன் எனது, நண்பர் ஒருவர் வீட்டுக்கு, வந்தார் ; நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். கடைசியில் புறப்படும்போது 'குழந்தையை'ப் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டார். அவருடைய நண்பர் தம் குழந்தைக்குப் பிறந்த நாள் விழா என்றும், அதுபற்றி மலர் வெளியிடப் போவதாகவும் சொன்னார். அவர் வந்து பேசிக்கொண்டிருந்த அதே வேளையில் என் மகள் செல்வி மங்கையர்க்கரசியும் முதல் மகவு பெற்றெடுத்தாள். இரண்டும் ஒன்றிய அந்த வேளையில் தான் இந்த நூல் எழுதவேண்டும் என்ற உணர்வும் தோன்றிற்று. எனவே மகளுக்கு அவள் பெற்ற மகப்பேற்றினை விளக்கும் வகையிலே இந்நூலைக் கடித வடிவில் எழுதத் தொடங்கினேன். அதன்படியே ஒவ்வொரு கடிதமாக எழுதி முடித்தேன். ஒரு கடிதத்தை என் நண்பருக்குக் கொடுத்தேன். பிறவற்றைத் தொகுத்து வைத்தேன். பதினேழு கடிதங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

மனித வாழ்வில் பெறவேண்டிய செல்வங்கள் எத்தனையோ உள்ளன; எனினும் அவற்றுளெல்லாம் தலையாயது. மக்கட் செல்வமே என்பதைப் பலரும் நன்கு விளக்கிக் காட்டியுள்ளார்கள். உலக வாழ்விலே இல்லறம் துறவறம் என்ற இரண்டும் இருப்பினும் இல்லறமே துறவறத்தினும் மேம்பட்டு விளங்குகின்றது. உலகைப் பற்றிக் கவலையுறாது, தன்னைப்பற்றியும் தன் உயிரைப் பற்றியுமே கவலைகொள்ளும் தனிநலம் சூழ்ந்த துறவறத்திலும், தன்னை ஒவ்வொரு வகையினும் மற்றவர்களுக்கு ஒப்படைக்கும் இல்லறம் சிறந்தது தானே. தனித் தனி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மக்கட்_செல்வம்.pdf/5&oldid=1380591" இலிருந்து மீள்விக்கப்பட்டது