பக்கம்:மக்கட் செல்வம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாக வாழ்ந்த தலைவனும் தலைவியும் மணத்தால் ஒன்று கூட, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, தன்னலமற்று வாழக் கற்றுக் கொள்ளுகின்றனர். பின் தங்கள் மக்களுக்காக இருவருமே வாழ்வைத் தியாகம் செய்கின்றனர். பிறகு அன்பின் எல்லை விரிவடையச் சுற்றத்தார், ஊரார், உலகத்தார், பிறர் என்றெல்லாரும் வாழவேண்டித் தம்மையும் தம் நலன்களையும் கட்டுப்படுத்திக் கொள்ளுகின்றனர். இல்வாழ்வான் எல்லார்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்பதை வள்ளுவர் பலவகையில் விளக்குகின்றாரன்றோ அந்த, இல்லற வாழ்வில் முளைக்கும் கான்முளைகளாகிய குழந்தைகள் தாம் பெற்றோர் வாழ்ந்த வழியைப் பின்பற்றி அவர்களை உலகில் வாழையடி வாழையாய் வாழவைக்கின்றன.

இந்த மக்கட் செல்வத்தைப் பற்றி உலகம் தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை பாடாத புலவர் இல்லை. கலைநலம் கண்டு கவிபாடும் புலவர்கள் மட்டுமன்றி, இன்றைய விஞ்ஞானிகள் கூட இந்தக் குழந்தைச் செல்வத்தின் சிறப்பைக் காட்டுகிறார்கள். ஓரறிவுடைய உயிரினங்கள் தம் மக்கட் செல்வங்களை எவ்வெவ்வகையில் வளர்த்து இனப் பெருக்கம் செய்கின்றன என்பதைத் தாவர நூற் புலவர் விஞ்ஞான ஆய்வு களத்தில் கண்டு கண்டு எழுதியுள்ளனர். பிற உயிரினங்களின் இனப்பெருக்கத்தையெல்லாம் விலங்கு பறவை இவைகளை ஆராயும் உயிர் நூல் புலவர்கள் தத்தம் ஆய்வு களத்தும் இயற்கைச் சூழலினும் கண்டு கண்டு உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள். அதேபோன்று மனிதனுடைய கருவின் வளர்ச்சிபற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் விளக்கிக் காட்டுகின்ற புலவரும் பலர்.

இந்த நூலில் குழந்தை நலம் பற்றிய பலருடைய கருத்துக்களைத் தொகுத்துப் பதினேழு கடிதங்களாக எழுதி இருக்கின்றேன். சங்க காலம் தொடங்கி இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மக்கட்_செல்வம்.pdf/6&oldid=1380590" இலிருந்து மீள்விக்கப்பட்டது