பக்கம்:மக்கட் செல்வம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சிறுவர்ப் பயந்த செம்மலோர்.


யன்றோ! இன்றும் குழந்தைகளைப் பெற்றவர் தவறு செய்தால் ‘பிள்ளைகளைப் பெற்ற இவரும் தவறு செய்கிறாரே’ என உலகம் இடித்துரைப்பதையும், அப்பழிக்கு அஞ்சியாயினும் மக்களைப் பெற்றோர் தவறாது நடக்க முயன்று இம்மையில் நற்பெயரையும் மறுமையில் இன்பத்தையும் பெறுவதைக் காண்கிறோ மல்லமோ?

இத்தகைய மக்கட் செல்வத்தை இடைக்காலத்தில் சிலர் இழித்துரைக்க நினைத்தனர் ‘இதமுறல் என்னாள் சேயால் என்றைக்கும் துன்பம் ஆமால்?’ என்றும் பாடி விட்டனர். இந்தக் கொடுமை எல்லாம் தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் புகுந்த துறவுக் கொள்கையால் வந்த விளைவு. எனினும் தமிழ் நாட்டுப் பழங் கொள்கை ‘அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை’ என்பதே. இன்றும் துறவுக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வில்லை என்பது துறவியர் நிலை அருகி உள்ள ஒன்றே எடுத் துக் காட்டும். என்றும் தமிழர் இருமையும் நலம் தரும் மக்கட் செல்வத்தைப் போற்றியே வந்தார்கள் என்பது தெளிவு.

இந்த இம்மை மறுமை இன்பம் தரும் குழந்தைகளை உற்றார் மற்றார் மட்டுமன்றிச் செறுநரும் விழைவர். ஆம்! குழந்தைகளுக்கு வேறுபாடு இல்லை. அது அனைவரிடமும் தாவிச் செல்லும். அவ்வாறாய ‘குழந்தைகளைப் பெற்றவர்கள் சிறந்தவர்’ என்பது பழமொழி என்கின்றாள் தலைவி. உலகில் உயிர்த்தோற்றம் என்று உண்டோ அன்றிருந்தே இச்சொல் மெய்மையாக விளங்குகின்றதன்றோ! எனவே பண்டுதொட்டுப் பலர் உண்மையாகக் கண்டு கூறிய மொழி பழமொழியல்லவா? அப்பழமொழிப்படி நன்மகப் பேறு எய்திய நீயும் நலமெல்லாம் பெற்றுச் சிறக்க என வாழ்த்தி இக்கடிதத்தை முடித்துக் கொள்ளுகிறேன்.

அன்புள்ள,
அப்பா.