பக்கம்:மக்கட் செல்வம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பிள்ளைத்


மாட்டேன் என்று வேடிக்கையாகக் கூறுகின்றார். அதில் குழந்தைக்குத் தாயார் செய்ய வேண்டிய கடமைகள் அத்தனை வகையையும் இணைத்துக் காட்டுகின்றார் புலவர். அந்தப் பாடலைக் கேட்டால் யார் தான் அருகில் வாராது இருப்பர்? அம்மை காந்திமதி அருகில் வந்து அருள் புரியாதிருப்பளோ ! கட்டாயம் புரிந்திருப்பாள். இதோ அவர் பாடல்,

“வாரா திருந்தால் இனிநான்உன்
       வடிவேல் விழிக்குமைஎழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன்
       மணியால் இழைத்த பணிபுனையேன்
பேராதரத் தினொடு பழக்கம்
       பேசேன் சிறிதும் முகம்பாரேன்
பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்
       பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் விதி வளங் காட்டேன்
       செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும்மணித் தொட்டிலில் ஏற்றித்
       திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
       தவழும் குழந்தாய் வருகவே
சாலிப்பதி வாழ் காந்திமதித்
       தாயே! வருக வருகவே!

இந்தப் பாடலைப் படிக்கும்போது நம் உள்ளம் எவ்வளவு மகிழ்கிறது என்பதை நீயே எண்ணிப்பார். இப்படியே ஒவ்வொரு பருவத்திலும் குழந்தை விளையாட்டைப்பற்றியெல்லாம் அன்புடைய அறிஞர்கள் பாராட்டிப் பாடியுள்ளார்கள்.

இன்னும் முத்தம் பருவம், அம்புலிப் பருவம் போன்றவற்றுள்ளே குழந்தை முத்தத்துக்கு ஏங்கும் பெற்றோர்கள் நிலை எல்லாம் நன்கு விளக்கப் பெறுகின்றன. அத்துடன் குழந்தையோடு அம்புலியை விளையாட அழைக்கும் பருவமே பிள்ளைத் தமிழில் சிறந்த இடத்தைப்