உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அவர்கள்‌ அரசனுக்குத்‌ துணை நின்று பிரிட்டிஷ்‌ மாமன்றத்தை ஒடுக்குவதென்றும்‌ ஒப்பந்தமாகிவிட்டது, அதன் பொருட்டே அரசன்‌ அங்கு செல்கிறான்‌ என்று பேச்சுக்‌ கிளம்பிற்று. முன்னேற்பாடு குறையின்றி இருக்கவேண்‌டும்‌ என்பதற்காக; ஒரு குழுவினரை, மன்னனுடன்‌ செல்ல மாமன்றம்‌ அமைத்தது. மாமன்றத்தின்‌ அரிமா நோக்கு அரசன்மீது எப்போதும்‌ இருத்தல்வேண்டும்‌. சிறைக்‌ காவலர்கள்‌ கைதியைக்‌ கண்காணிப்பது போல, மன்னன்‌ ஆகிவிட்டான்‌; மறுப்பதற்கில்லை. இந்தக்‌ குழுவில்‌, ஹாம்டன்‌ இருந்தார்‌.

மாமன்றம்‌, பல்லாண்டுகளாகக்‌ குவிந்துகிடந்த குப்பையைக்‌ கூட்டித்‌ தள்ளிற்று—பட்ட கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள ஓய்வு தேவைப்படவே பிறகு கூடுவதெனக்‌ கலைந்தது.

மாமன்ற உறுப்பினர்கள் தத்தமது வட்டம் சென்றனர், அங்கெல்லாம்‌ அவர்கள்‌ மக்களிடம்‌, பூத்து வரும்‌ புது மலரின்‌ அழகு குறித்தும்‌, மணம்‌ பற்றியும்‌ எடுத்துரைத்தனர்‌. வெற்றி வீரர்களாக வீடு திரும்பினோரை மக்கள்‌ வாழ்த்தி வரவேற்றனர்‌. “பெற்றோம்‌ வெற்றி, பெருமைக்குரியதே! எனினும்‌ பெற்ற வெற்றியை அழித்திட மன்னன்‌ புது முயற்சிகள்‌ செய்யக்கூடும்‌ எனவே நாம்‌ எதற்கும்‌ தயாராக இருக்க வேண்டும்‌” உறுப்பினர் அறிவுரை கூறினர்‌.

மாமன்றம்‌ கூடாதிருக்கும்‌ நாட்களில்‌ இன்றியமையாத ஏற்பாடுகளைக்‌ கவனிக்கவும்‌, நிலைமைகளுக்கேறப கட்டளை பிறப்பிக்கவும்‌, ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக்‌ குழுவில்‌, பிரபுக்கள்‌ சபையினரும்‌ உண்டு. மாமன்றம்‌, பிரபுக்களை வீணாக எதிரி முகாமுக்குத் துரத்த வரும்பவில்லை. மக்களாட்சியை மதிக்கும்‌ பிரபுவை,