129
இருக்கமாட்டார்கள்—பத்தாண்டுகளுக்கு முன்பு சொல்பவன் பிணமாக்கப்பட்டிருப்பான்—ஆனால் இதோ 1649-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் முப்பதாம் நாள், மன்னன் சார்லஸ், அவன் அரண்மனைக்கு எதிரே அமைக்கப்பட்ட தூக்குமேடைக்கு அழைத்துக்கொண்டு வரப்படுகிறான்.
எதிரே மக்கள் திரளாக, ஆனால் கண்டனம் இல்லை, கலகம் இல்லை, இந்த நிலைக்குத் தன்னைத்தானே துரத்திக் கொண்டானே மன்னன், என்ற வருத்தம் தோய்ந்த முகத்துடன் உள்ளனர்.
மன்னன் வருகிறான், படை வீரர்கள், முரசுகளைக் கொட்டுகிறார்கள்.
மன்னன் தூக்குமேடை ஏறுகிறான் உடன் இருக்கும் உற்ற நண்பர்கள் அழுகிறார்கள்—ஒருவர் மயக்கமுற்றுக் கீழே சாய்கிறார்.
மன்னன் பதறவில்லை, கதறவில்லை, சிரத்தைச் சாய்க்கிறான்—ஒருவெட்டு—சிரம் துண்டிக்கப்பட்டு விட்டது—“இதோ துரோகியின் தலை” என்று ஒருவன் எடுத்துக் காட்டுகிறான், தத்துவத்தால் தன்னைத்தானே அழித்துக் கொண்ட சார்லசின் சிரத்தை!
மக்கள் கரம், மன்னன் சிரத்தையும் கொய்துவிடும் வலுப்பெற்றது.
அது ஏர்பிடிக்கும், துலாக்கோல் பிடிக்கும், கூப்பும், தழுவும், வரிசெலுத்தும், வணக்கம் கூறும்,—ஆனால் தாங்கொணாத கொடுமை செய்து, உரிமையைப் பறித்திடக் கொடுங்கோலன் கிளம்பினால், அந்தக் கரம், அவன் சிரம் அறுக்கும். சார்லஸ் சம்பவம் இதைக் காட்டும், பயங்கரப் பாடம்! பாராள்வோர் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டிய பாடம்!!
🞸