உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கத்தோலிக்க மார்க்கம்‌ மீண்டும்‌ எங்கே புகுந்துவிடுமோ என்ற அச்சம்‌ மக்கள்‌ மனதிலே அதிகமாக வளருவதற்கான ஒரு சம்பவமும்‌ நடைபெற்றது. அது, ஜேம்ஸ்‌ மன்னன்‌ பட்டத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே. ஜேம்ஸ்‌ மன்னன்‌ மூலம்‌ தனியான சலுகைகள்‌ கிடைக்குமென்று எதிர்பார்த்து, ஏமாந்த கத்‌தோலிக்கர்‌ சிலர், ஸ்பெயின் நாட்டைச்‌ சார்ந்த கைபாக்ஸ்‌ என்பவனைக்‌ கருவியாக்கி, மாமன்றத்தினரும்‌ பிரபுக்கள்‌ சபையினரும்‌, மன்னனும்‌ ஒன்றாகக்‌ கூடிடும்‌ நாளன்று, வெடிமருந்துகொண்டு, ௧ட்டிடத்தைத்‌ தகர்த்துவிடுவது என்று சதி செய்தனர்‌. மன்னனும்‌, மாமன்றத்தாரும் படுகொலை செய்யப்பட்டதும்‌, பிரிட்டனில்‌ "இங்கும்‌ அங்குமாக, ஆனால்‌ செல்வத்துடன்‌ உள்ள கத்தோலிக்கப்‌ பிரபுகள்‌ படை திரட்டிக்கொண்டு சென்று, அரசைக்‌ கைபற்றி, கத்தோலிக்க மார்க்கத்தை மீண்டும்‌ புகுத்துவது" என்பது, சதித்‌ திட்டம்‌. இது கண்டுபிடிக்கப்‌பட்டது—சதிகாரர்கள்‌ கொல்லப்பட்டனர்‌,

ஏற்கனவே இருந்த அச்சம்‌ இதனால்‌ பல மடங்கு, அதிகமாகிவிட்டது, கத்தோலிக்கரைக்‌ கருவறுக்கவேண்‌டும்‌ என்ற துடிதுடிப்பு அதிகமாகிவிட்டது. அந்தச் செயலில்‌ மன்னன்‌ இறங்கினால்‌, அவன்‌ பக்கம்‌ நின்று பணியாற்றுவது என்ற உறுதியைத் தெரிவிக்கும் வகையில், மாமன்றம் மன்னன்‌ கேட்டபடி, தாராளமாகவும்‌ ஏராளமாகவும் பணம் தரக்கூட முன்வந்தது, மன்னனோ இந்தக் குறிகண்டு மகிழ்ந்து, மாமன்றத்தைத் தன் துணைக்கருவியாக்கிக் கொள்ளக்கூட முயலவில்லை. வாதிட்டுப் போரிட்டு ஐந்துமுறை கூட்டிக் கலைத்து, மாமன்றத்தின் வெறுப்பைக் கிளறினான். அத்துடன் நிற்கவில்லை, தன் மகனுடைய திருமண பிரச்னை மூலம், மக்களுடைய மருட்சியை அதிகமாக்கினான்.