66
அறிந்துகொள்ள முடியுமா? மாமன்றமும் அறிய முடியுமே! ஏன் மாமன்றத்தைக் கூட்டவில்லை?”
“அது வேறு விஷயம்”
“அதுதான் முக்கியமான விஷயம்”
“கப்பல் வரி விதிக்க மன்னருக்கு உரிமை இருக்கிறது”
“காரணம் என்னவென்று கேட்க மக்களுக்கு உரிமை இருக்கிறது.”
ஹாம்டன் வழக்கு, இவ்விதம் உருவெடுத்தது. மீண்டும் நாட்டு மக்களுக்கு ஓர் நல்விருந்து, நீதிபதிகளுக்கு மனக்குழப்பம், மறுபடியும், எதேச்சாதிகார ஆட்சிக்குக் கண்டனம் அலை அலையாகக் கிளம்பிற்று, மக்களை மதியாமல் ஆட்சி நடத்தக் கிளம்பிய மன்னன் பணத்துக்கு மட்டும் மக்களை நாடுவானேன்? ஆண்டவன் அருளால் அல்லவா, ஆட்சி கிடைத்தது, மக்களிடம் வரி கேட்பானேன். அதனையும் ஆண்டவன் அருளமாட்டாரா? மக்கள் விதவிதமாகப் பேசலாயினர். நீதிபதிகளோ. ஆளுக்கொரு தீர்ப்பளித்தனர். அச்சத்துக்கு ஆட்பட்டவர்கள் அரசன் சார்பிலே! மக்களின் முழக்கத்தின் பொருளை உணர்ந்தோர், மக்கள் சார்பிலே! ஹாம்டன், கப்பல் வரி கட்ட மறுத்து, நீறுபூத்த நெருப்பாக மக்கள் மனம் இருப்பதை மன்னன் அறியச் செய்தான்.
அச்சத்தால் நீதிபதிகள் தாக்கப்பட்டு, ஹாம்டனுக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர் எனினும், இந்த வழக்கு, மக்களை தட்டி எழுப்பிட உதவிற்று. இந்த வழக்கு பன்னிரண்டு நாட்கள் நடைபெற்றது—வழக்கு மன்றத்திலே விவாதிக்கப்பட்டதை விடத் தீவிரமாக மக்கள் வீடுகளிலும் கடைவீதிகளிலும் இதுபற்றிப் பேசினர்.