99
நிழலுருவில், இரு முகாம்கள் தெரியலாயின.
பதறிப்போன பிரபுக்கள், பரிவாரம் சூழ, மன்னன் ஓர்முகாமில். ஆணவம் குறைந்திருக்கிறது, எனினும் ஆசை அழிந்துபடவில்லை; தத்துவம் மேலோங்கியே நிற்கிறது.
வெற்றிக் களையுடன் மாமன்றத்தார், வீர முழக்கமிடும் மக்கள், மற்றோர் முகாமில்.
கூலி கொடுத்தால் வேலை செய்யலாம் என்பதன்றி வேறு குறிக்கோளில்லாமல் ஒரு பகுதி மக்கள் உள்ளனர்; படையில் சேர விழைவோர்.
அரசனுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கென்றே ஏற்பட்ட தனி நீதிமன்றங்கள், நட்சத்திர மண்டபம் போன்றவைகளை, மாமன்றம் கலைத்தது.
படைவீரர்களைக் கட்டாய விருந்தினராக்கும், கயமைக்கு, சாவுமணி அடித்தது.
கட்டாய கடன் போன்ற வரிமுறைகளை ஒழித்தது.
காட்டுச் சட்டத்தை அழித்தொழித்தது.
மாமன்றத்தின் ஒப்பம் இன்றி வரி வசூலிக்கும் போது, மன்னனுடன் ஒத்துழைத்தவர்களுக்கெல்லாம், சீட்டுக் கிழிக்கப்பட்டது; எதிர்த்து நின்றோருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
அரண்மனையில் மன்னன் இருக்கிறான், மாமன்றம் அரசோச்சுகிறது. கணக்குத்தீர்க்கும் காரியம், தீவிரமாக நடைபெறுகிறது. மாமன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், மக்கள் உள்ளத்திற்கு தென்றலென இனிக்கிறது, மன்னனுக்கோ வாடை என வாட்டுகிறது. இந்த நெடுநல்வாடை கண்டு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஆச்சரியமடைகின்றன.