பக்கம்:மச்சுவீடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மச்சு வீடு

இடத்தை அடைத்துக் கொள்வார். இதைக்கூட ஹாஸ்ய ரஸம் உண்டாகும்படி, "இடம்படு விக் கின விநாயகா" என்று சொல்கிறான். உபாத்தியாயருக்கு இணங்கி, தாய் தகப்பன்மாருக்கு இணங்கி, படிப்புக்கு இணங்கி வரும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள். அவர்களுக்குக் கணபதி நன்மை புரிவார். அவர்களுக்கெல்லாம் சட்டாம்பிள்ளையாக இருந்து கல்வி அறிவு மிகும்படி செய்வார். "இணங்கிய பிள்ளைகள் தலைவா" என்று பிள்ளையாரைப் புகழும் போது இந்த எண்ணங்களெல்லாம் சிறு குழந்தைகளின் மனத்தில் உதயமாகின்றன. இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்குத் தலைவனாக இருந்தாலும் கணபதி தத்துவ மறைகளாகிய வேதங்களைத் தெரிந்தவர், ஞானக் குன்று, நர்த்தனம் செய்யும் மாணிக்கம். இப்படிப்பட்ட பெரிய விஷயங்களையும் குழந்தைகள் சொல்லுகின்றன; உபாத்தியாயர் சொல்லிக்கொடுக்கின்றார்; தங்களுக்கு விளங்காவிட்டாலும் சொல்லி வைக்கின்றன. பிற்காலத்தில் விளங்கினாலும் விளங்கும் அல்லவா?

எழுந்தவுடன் தூக்க மயக்கத்தில் கூட முதல் முதலாகக் கணபதியின் திருவடிகளைத் தொழ வேண்டு மென்பது குழந்தையின் முடிவான பிரார்த்தனை. "அனந்தலோடு ஆதியில் அடிதொழ அருளே," அனந்தல்-தூக்க மயக்கம். மனித வாழ்வின் அதி காலையாகிய குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு நாளிலும் அதிகாலையில் தெய்வ நினைவோடு எழுவதென்பது எவ்வளவு நல்ல பழக்கம்! இந்திய நாட்டு வழக்கம் இது; தமிழர் பழைய மரபு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/16&oldid=1302255" இலிருந்து மீள்விக்கப்பட்டது