பக்கம்:மச்சுவீடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மச்சு வீடு

சரஸ்வதியின் திருவருள் நிரம்பப் பெற்றவர்கள். கம்பர் சரஸ்வதி அந்தாதி என்ற துதி நூல் ஒன்றை இயற்றியிருக்கிறார். ஒட்டக்கூத்தர், கூத்தனூர் என்ற ஊரில் சரஸ்வதிக்குத் தனியே ஒரு கோயில் கட்டு வித்து வழிபட்டார். குமரகுருபர ஸ்வாமிகள் என்ற பெரியார் சகலகலாவல்லி மாலை என்ற துதி நூலைப் பாடி ஹிந்துஸ்தானி பாஷையை விரைவிலே கற்றுக் கொண்டாராம்.

இந்தப் புலவர்கள் பாடிய பாடல்களும் வேறு சில தனிப் பாடல்களும் கலைமகள் துதியாகத் தமிழில் வழங்குகின்றன. பள்ளிக்கூடக் குழந்தைகள் துதிக்கும் படி ஒரு தோத்திரம் உண்டு. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பழங்காலத்தில் அந்தத் தோத்திரங்களைக் கற்றுக் கொடுப்பார்கள். கலைத் தெய்வத்துக்கு உண்மையான கோயில் பள்ளிக்கூடம் அல்லவா?

பள்ளிக்கூடக் குழந்தை சொல்லும் பாடலிலே வாத்தியாருக்கு மட்டும் விளங்கும் செய்திகளும் உண்டு. ஆனாலும் குழந்தை மிகவும் பயபக்தியோடு பாட்டைச் சொல்வதில் தவறுவதில்லை.

"புத்தகத்துக்கு உள்ளே இருக்கும் தேவீ, வெண்தாமரைப் பூவிலே வீற்றிருக்கும். செல்வியே, மிக்க அறிவுடைய பெண் தெய்வமே, வேதங்களிலே சொல்லப்பட்ட பொருளுக்கெல்லாம் நாயகியே, முத்தால் - ஆகிய குடையை உடையவளே, மூன்று உலகமும் தொழும் தேவியே" என்று தோத்திரம் செய்ய ஆரம்பிக்கிறது குழந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/18&oldid=1302294" இலிருந்து மீள்விக்கப்பட்டது