பக்கம்:மச்சுவீடு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நாடோடிப் பாடல்களில் ஈடுபட ஈடுபட அவற்றில் நம்முடைய நாட்டுக்கே உரிய பண்பு எவ்வளவு தெளிவாகப் புலனாகிறது என்பதை உணர்கிறேன். காலந்தோறும் நம்முடைய வாழ்க்கை நிலைகள் மாறுகின்றன; தொடர்புகள் மாறுகின்றன. ஆனாலும் சில அடிப்படையான பண்புகள் மாறுவதில்லை. முன் காலத்தில் நாம் மண் எண்ணெய் விளக்கு ஏற்றவில்லை; விளக்கெண்ணெய் விளக்கை ஏற்றினோம். மின்சார விளக்கு அப்போது இல்லை; ரெயில் இல்லை; மோட்டார் இல்லை. கட்டை வண்டிப் பிரயாணம் நடந்தபோது இருந்த அமைதி இப்போது இல்லை. அமைதியிலே பாட்டுப் பிறக்கும்; புற அமைதியிலே; - கவிஞனுடைய அகம் கவி வெறியினால் கொந்தளித்து உணர்ச்சிவசமாகும்; அப்போது கவி மலரும். ஆதலின், கட்டை வண்டிக்காரன் பல பாட்டுக்களைப் பாடினான்; நாடோடியாக வழங்கும் பாடல்களைக் கற்றுக்கொண்டு பாடினான். ரெயில் வண்டி வந்த பிறகு அத்தனை பாட்டு இல்லை; ஆனால் ரெயில் வண்டிப் பாட்டும் நாடோடி உலகத்தில் உண்டு.

காலத்தின் மாறுபாட்டால் வந்த ரெயிலுக்கும், மோட்டாருக்கும்; வெள்ளைக்காரனுக்கும், வக்கீலுக்கும் பாட்டுக்கள் இருக்கின்றன. இங்கிலீஷ் வார்த்தைகள் கூட இந்தப் பாட்டுக்களில் ஏறியிருக்கின்றன. காலேஜ் படிப்பின் அம்சங்களை விரிவாகச் சொல்லும் பெரிய பாட்டு ஒன்று உண்டு. அதற்குக் காலேஜ் ஓடம் என்று பெயர்.

காலத்தால் மாறுபடாத பண்புகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. பாரத நாட்டில் கடவுள் நம்பிக்கையும், புண்ணிய பாவங்களுக்கு அஞ்சுவதும், சமயநெறிப் பற்றும் எக்காலத்தும் உள்ளவை. ஞானிகளென்றும் மகான்களென்றும்: சாதுக்களென்றும் சிலர் வாழ்வதும், அவர்களைக் கண் கண்ட தெய்வங்களாக மதித்துப் போற்றி வழிபடுவதும் இன்று நேற்று வந்தன அல்ல; இனிச் சில காலத்தில் ஒழிவனவும் அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/5&oldid=1301663" இலிருந்து மீள்விக்கப்பட்டது