பக்கம்:மச்சுவீடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii

பாரதநாடு உள்ள வரையில் இவை இருக்கும். என்று இவை மறையுமோ அன்று பாரதநாடும் மறைந்துவிடும். மண் இருக்கலாம், மலை இருக்கலாம் ; நீர் இருக்கலாம், நிழல் இருக்கலாம். அலை இருந்த மாத்திரத்தில் பாரதநாடு இருக்கிறதென்று சொல்ல முடியாது. பாரத நாட்டுக்குரிய சிறப்புப் பண்பு இருக்க வேண்டும். சால்பு என்றும், பண்பாடு என்றும், கல்ச்சர் (culture) என்றும் பலவாறு சொல்லுகிற சரக்கு இந்த நாட்டுக்கென்றே தனி வகையில் அமைந்திருக்கிறது. அது உன்னதமான இலக்கியங்களிலும் மணக்கும் ; பாமர மக்களின் பாட்டிலும் மணக்கும். வாழ்விலே தளிர்த்து, சிந்தனையிலே மலர்ந்து, இலக்கியத்திலே கனிந்து, கலைகளிலே மணந்து விளங்கும்.

இந்தப் புத்தகத்தில் உள்ள நாடோடிப் பாட்டுக்கள் பாரத நாட்டின் தனிப் பண்பாகிய தெய்வ நம்பிக்கையையும், சமயபற்றையும் விளக்கத் தக்கவை. சின்னஞ் சிறு குழந்தை முதல் கிழவர் வரையில் கடவுளைப்பற்றிப் பேசுகிறார்கள். குழந்தை புத்தகத்திலே கலைமகளைப் பார்க்கிறது. பரதேசி உலகமுழுவதும் முருகனைப் பார்க்கிறான். குழந்தையின் விளையாட்டிலே கண்ணன் வருகிறான். ஞானிகளின் பெருமையைக் கொச்சை மொழியிலே பாடுகிறார்கள் பாட்டிமார்கள் ; மனோலயம் எப்படி, வருமென்பதைச் சொல்லுகிறார்கள்.

இத்தகைய பாடல்கள் இன்னும் பல பல அங்கங்கே வழங்குகின்றன. சாஸ்திரங்களிலே சொன்ன நுட்பமான கருத்துக்களைத் தெளிவான உபமானங்களுடன் சொல்லும் பாடல்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் தொகுத்து யார் வெளியிடப் போகிறார்கள்! நம்மால் புறக்கணிக்கப் பெற்றுப் பல பாடல்கள் மறைந்து ஒழிந்தன. இன்னும் சில உயிர் வைத்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் எவ்வளவு காலம் அவை வாழமுடியும்?

இதில் உள்ள பாட்டுக்கள் அவற்றின் இயல்பை ஒரு வாறு தெரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

5-6-'52கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/6&oldid=1301704" இலிருந்து மீள்விக்கப்பட்டது