பக்கம்:மணமக்களுக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மாப்பிள்ளையின் தந்தை காங்கிரஸ்காரர். மாமன் கம்யூனிஸ்டு. பெண்ணின் தந்தை தி.மு.க. மாமன் தி.க. நடைபெறுமா கல்யாணம்? யாரை வைத்துத் திருமணம் நடத்துவது என்ற குழப்பத்திலேயே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. கடைசியாக அழைப்பு எனக்கு வந்தது. நான் போய் அத்திருமணத்தை நடத்தி வந்தேன். அப்பொழுது ஒத்த கல்வி. ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த உயரம், ஒத்த குலம் ஆகியவைகளில் ஒன்றுபட்ட நீங்கள், ஒருவருக்கொருவர் ஒத்த உரிமையும் கொடுத்து வாழுங்கள் என்று அறவுரை கூறி வந்தேன்.

ஆறுமாதம் கழித்து, மணமகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நீங்கள் கூறிய அறவுரை எனக்கு தொல்லையாய்ப் போயிற்று. பெண் எதற்கெடுத்தாலும் சமஉரிமை கோருகிறது. தண்ணீர் இறைப்பதிலும், துணி துவைப்பதிலும், சமைப்பதிலும்கூட நான் பங்குபெற வேண்டுமெனக் கட்டாயப் படுத்துகிறது. நான் எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. ஒரு நாள் கதவைச் சாத்திவிட்டு, மனைவியை உட்கார வைத்து, 'நமக்குள் சண்டை வேண்டாம். தண்ணிர் இறைக்கவும் வேண்டாம். அடுப்புப் பற்றவைக்க வேண்டாம். சமைக்கவும் வேண்டாம். பக்கத்திலுள்ள ஒட்டலுக்குச் சென்று உணவு வாங்கி வந்து, நாம் இருவரும் சாப்பிட்டு விடலாம்' என்றேன். அதற்கு என் மனைவி 'இது நல்ல யோனைதான், எனக்கும் சம்மதமே' எனக் கூறி, இன்றைக்கு நீங்கள் போய்ச் சாப்பாடு வாங்கி வாருங்கள்: நாளைக்கு நான் போய்ச் சாப்பாடு வாங்கி வருகிறேன்' என்று கூறுகிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, இதற்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்; ஏனென்றால், இது உங்கள் அறவுரையால் வந்த வினை' என்று எழுதப்பெற்று இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/36&oldid=1306934" இலிருந்து மீள்விக்கப்பட்டது