பக்கம்:மணி பல்லவம் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

மணிபல்லவம்

சேரவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். முன் கூடத்தை அடுத்து அவளுடைய இசைக் கருவிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கீதமண்டபமும் அதையடுத்து நாட்டியமாடும் காலத்தில் பயன்படுத்தும் நிருத்திய மண்டபமும் அணிமணிகள் உடைகள் புனைந்து கொள்ளும் தனியான அலங்கார மண்டபமும், இறுதியாகச் சித்திரச்சாலையும் அமைந்திருந்தன. இவ்வளவு இடங்களையும் கடந்து செல்ல வேண்டிய இறுதிப் பகுதியாக அமைந்திருந்த காரணத்தால் சுரமஞ்சரியோ, அவள் தோழியோ உடன் அழைத்துச் சென்றாலன்றி அவளுடைய சித்திரச்சாலைக்குள் பிறர் நுழைவது வழக்கமில்லை. ‘வசந்தமாலை திரும்பி வருகிறவரை சித்திரச்சாலையில் பொழுதைக் கழிக்கலாம்’ என்ற நினைப்புடன் தனிமை தந்த உல்லாசத்தில் ஒரு பாடலை மெல்ல இசைத்துக் கொண்டே கீத மண்டபத்தைக் கடந்து சித்திரச் சாலைக்குச் செல்வதற்காக மேலே நடந்தாள் சுரமஞ்சரி.

இதழ்களில் மெல்லிசை இழைந்து ஒலிக்க நடந்து சென்றவள் அலங்கார மண்டபம் முடிந்து சித்திரச்சாலைக்குள் இறங்கும் படி அருகிலேயே திகைத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாவிலிருந்து எழுந்த மெல்லிசை நின்றது. அவள் முகத்தில் வியப்பும் பயமும் நிறைந்தன. காரணம்? சித்திரச்சாலைக்குள்ளிருந்து மெதுவாகவும் மர்மமாகவும் பேசிக் கொள்ளுகிற ஆடவர் பேச்சுக் குரல் அவள் செவிகளை எட்டியது. ‘நான் பேணிப் பாதுகாத்து வரும் என்னுடைய சித்திரச்சாலையில் சொல்லி அனுமதி பெறாமல் என் தந்தையார் கூட் நுழைய மாட்டாரே? இப்படி நான் இல்லாத வேளையில் துணிந்து இங்கே நுழைந்திருக்கும் இவர்கள் யாராயிருக்கலாம்?’ என்ற பயம் கலந்த சந்தேகத்துடன் ஓசைப்படாமல் சித்திரச் சாலைக்குள் இறங்கும் இரண்டாவது படியில் காலை வைத்து மெல்லத் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/109&oldid=1141779" இலிருந்து மீள்விக்கப்பட்டது