பக்கம்:மணி பல்லவம் 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

117

அப்போது நல்ல பசி. பசியின் வேதனையும் ஆத்திரத்தோடு சேர்ந்து கொண்டிருந்தது. நாளங்காடியிலிருந்து தொடர்ந்து ஏற்பட்ட அனுபவங்களால் அவனுக்கு உண்டாகியிருந்த இனம்புரியாத மனக்கொதிப்பும் சேர்ந்து சினமாக மூண்டிருந்தது. பின் தொடர்ந்து வந்த ஒற்றைக் கண்ணன் அருகில் வந்திருந்தால் தனக்கு இப்போதிருந்த சினத்தில் அவனைப் பந்தாடியிருப்பான் இளங்குமரன். அருகில் தென்படாததால் அந்த ஒற்றைக் கண் மனிதன் பிழைத்தான். குதிரைகளையும் அருகில் நடத்திக் கொண்டு இளங்குமரனோடு மேலே தொடர்ந்து நடந்தார்கள் நண்பர்கள். சிறிது தொலைவு சென்றதும் “நேற்றே இரவில்” என்று தொடங்கி எதையோ அவசரமாகச் சொல்ல முற்பட்டான் கதக்கண்ணன், ஆனால் இளங்குமரன், “அதைப் பற்றி இப்போது இங்கே சொல்ல வேண்டாம்; பிறகு தனியே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்” என்று கூறி மேலே பேசவிடாமல் கதக்கண்ணனின் நாவை அடக்கி விட்டான். நெருங்கிய நண்பர்களாகிய தாங்கள் உடனிருக்கும்போது இளங்குமரன் இப்படி நடந்து கொண்டதைக் கண்டு நண்பர்கள் சிறிது திகைப்படைந்தனர்.

“இங்கே பட்டினப்பாக்கத்துக்கு நான் வந்திருக்கிறேனென்று உங்களுக்கு யார் கூறினார்கள்?" என்று இந்தக் கேள்வியை இளங்குமரன் கேட்கும் போது வேறு கவனங்களிலிருந்து நீங்கி முற்றிலும் நண்பர்கள் பக்கம் கவனித்தவனாகத் தோன்றினான். நாளங்காடிப் பூத சதுக்கத்தில் முல்லையைச் சந்தித்ததையும், அவளிடமிருந்து விவரமறிந்து கொண்டதையும் கதக்கண்ணன் இளங்குமரனுக்குச் சொன்னான்.

“கதக்கண்ணா! நானும் முல்லையும் நாளங்காடிக்குப் புறப்படும்போது உன் தந்தையார் கவலை கொண்டார். நான் இறுதிவரையில் முல்லைக்குத் துணையாயிராமற் போய் விடுவேனோ” என்று அவர் பயந்ததற்கு ஏற்றாற் போலவே நடந்துவிட்டது. பூத சதுக்கத்தில் நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/118&oldid=1141788" இலிருந்து மீள்விக்கப்பட்டது