பக்கம்:மணி பல்லவம் 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

மணிபல்லவம்

கொண்டிருந்தபோது யாரோ ஒரு கலைஞனுக்கு இரக்கம் காட்டப்போய் எப்படி எப்படியோ வம்புகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்துவிட்டது. முல்லையைத் தனியே விட்டு விட்டு அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே நான் பட்டினப்பாக்கம் போகும்படி ஆகிவிட்டது. பாவம்! முல்லைக்கு என்மேற் பெருங்கோபம் ஏற்பட்டிருக்கும்; உன் தந்தையாரிடத்திற் போய் நடந்தையெல்லாம் சொல்லியிருக்கப் போகிறாள். அவர் முனிவரிடம் என்னைப்பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருப்பார். என்மேல் ஆத்திரத்தோடு உன் தந்தையார் என்னை எதிர் பார்த்துக் காத்திருப்பார்”— என்று வருத்தம் தோய்ந்த குரலில் கதக்கண்ணனிடம் கூறினான் இளங்குமரன்.

“தந்தையார் உன்மேல் சினம் கொள்ளும்படியாக முல்லை ஒன்றும் சொல்லியிருக்கமாட்டாள். இளங்குமரா! உன்னை அவர் கோபித்துக் கொள்ளக் கூடாதென்பதில் உனக்கு எவ்வளவு கவலை உண்டோ, அதைக் காட்டிலும் அதிகமாக முல்லைக்கும் உண்டு என்பதை நான் அறிவேன்” என்று ஆறுதலாக மறுமொழி கூறினான் கதக்கண்ணன். மேலே அவனே கூறலானான். “இளங்குமரா! இந்திர விழாவின் இரண்டாம் நாளாகிய இன்றைக்கு நானும் நம் நண்பர்களும் உன் நலனைக் கருதி உன்னிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கலாமென நினைக்கிறோம். நீ அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.’

“உங்கள் வேண்டுகோள் இருக்கட்டும்! அதை அப்புறம் பார்க்கலாம். இந்தக் கணமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய அவசர வேண்டுகோள் ஒன்று எனக்கு இருக்கிறது. அது நிறைவேறாவிட்டால் நடந்து கொண்டிருக்கும் போதே எங்கேயாவது மயங்கி விழுந்து விடுவேன் நான். ஒரே ஒருமுறைதான் சொல்வேன். ஒரு விநாடிதான் சொல்வேன். இதோ கேளுங்கள் நண்பர்களே! மறுமுறை கேட்டால் சொல்லமாட்டேன்” என்று இரைந்து சொல்லிக் கொண்டே வந்த இளங்குமரன், குரலைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/119&oldid=1141789" இலிருந்து மீள்விக்கப்பட்டது