பக்கம்:மணி பல்லவம் 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

மணிபல்லவம்

வளநாடுடையார், ஒரு வேளை மாலையிருள் மயக்கத்தில் காணும் ஆற்றல் மங்கிய கண்கள் தம்மை ஏமாற்றுகின்றனவோ என்ற சந்தேகத்துடன் வலதுபுறம் மெல்லக் கை நீட்டி மாதவிக் கொடியின் இலைகளோடு இலைகளாகத் தெரிந்த அந்த வேல்களில் ஒன்றின் நுனியைத் தொட்டுப் பார்த்தார். சந்தேகத்துக்கிடமின்றி இலைகளிடையே தெரிந்தவை வேல் முனைகள்தாம் என்பதை அவர் விளங்கிக் கொள்ள முடிந்தது. அந்த விளக்கமும் போதாமல் இன்னும் ஒருபடி அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர் தாம் தொட்டுப் பார்த்த அதே வேல்முனையைப் பிடித்துச் சற்றே அசைத்துப் பார்த்தார். அவ்வளவுதான்! புற்று வளையிலிருந்து சீறிக் கொண்டு மேலெழுந்து பாயும் நாகப்பாம்பு போல் அந்த வேல்முனை முன்னால் விரைந்து நீண்டது! அப்படி அந்த வேல் முனை பாய்ந்து நீளும் என்பதை எதிர்பார்த்தவராக முன்னெச்சரிக்கையுடன் விலகிக் கொண்டிருந்தார் வளநாடுடையார். இல்லாவிட்டால் கூர்மையான அந்த வேல் அவருடைய பரந்த மார்பின் ஒரு பகுதிக்குள் புகுந்து புறப்பட்டிருக்கும். தாம் எத்தகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குப் புரிந்தது.

எதிர்ப்பக்கம் பார்க்கிறாற்போல் நின்று கொண்டு விழிகள் காது வரையில் நீள, தமக்கு இருபுறங்களிலும் அடர்ந்து இருண்டு படர்ந்திருந்த மாதவிப் புதரை ஊடுருவி நோக்க முயன்றார் வளநாடுடையார். தரையிலிருந்து அவர் நிற்கும் உயரத்துக்கும் மேலாக ஒருபாக உயரம் வரை கொடிகள் ஓங்கி வீசிப் படர்ந்திருந்ததனால் மாதவிப் புதருக்கு மறுபுறம் இருப்பவர்களை அவ்வளவு எளிதாகக் காண முடியவில்லை. எனினும் கண்கள், மூக்கு, கைகள் என்று தனித்தனியே இலைகளின் அடர்த்திக்கு அப்பால் சிறுசிறு இடைவெளிகள் மூலம் ஆட்கள் நிற்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. இருந்தாற் போலிருந்து மாதவிப் புதருக்கு இரும்புக் கரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/135&oldid=1141812" இலிருந்து மீள்விக்கப்பட்டது