பக்கம்:மணி பல்லவம் 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

147

மறவருக்கும் அவன் செல்லப் பிள்ளை. எவருக்கும் நெகிழ்ந்து கொடுக்காத இரும்பு மனிதரான நீலநாக மறவர் இளங்குமரனிடம் மட்டும் அன்பு மயமாக நெகிழ்ந்து விடுவதும், சிரித்துப் பேசுவதும் வழக்கம். அதனால் அவனுக்கு அந்தப் படைக்கலச் சாலையின் எந்தப் பகுதியிலும், எவரிடத்திலும் தனிமதிப்பும், அளவற்ற பேரன்பும் அளிக்கப்பட்டு வந்தன.

பெரு வீரராகிய நீலநாக மறவர் இளங்குமரனிடம் சிரித்துப் பேசிப் பழகுவதும் வெளிப்படையாக அன்பு செலுத்துவதும் மற்றவர்களுக்கு வியப்பாயிருந்ததற்குக் காரணம் உண்டு. அவர் வியப்பதற்கும் வணங்குவதற்கும் உரியவரே ஒழிய நெருங்கிப் பழகுவதற்கு உரியவரல்லர். அவராகவே முன்வந்து யாரிடமாவது பழகுகிறார் என்றால் அவ்வாறு பழக்கத்துக்கு ஆளானவனுடைய எதிர்காலத்தை அவர் இப்போதே கணித்தறிந்து உறுதியாக நம்பி மதிக்கத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்து கொண்டு விடலாம். அருட்செல்வ முனிவர், வீரசோழிய வளநாடுடையார் போன்ற வயது முதிர்ந்த சான்றோர்களிடம் நீலநாக மறவர் நெருங்கிப் பழகிய காரணம் வேறு. தம்மைப் போலவே அவரவர்கள் துறையில் அவ்விருவரும் இணையற்று விளங்கினார்கள் என்னும் மதிப்பீடு பற்றி வந்த பழக்கம் அது.

சிறப்புக்குரிய சோழ அரசு குடும்பத்துப் பிள்ளைகளும், புனல் நாட்டில் அங்கங்கே பெருமையோடிருந்த வேளிர்கள் எனப்படும் குறுநில மன்னர் குடியில் வந்த இளைஞர்களும், நீலநாக மறவரிடம் மாணவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கூடத் தமது கடுமையும் கம்பீரமும் குன்றாமல் அளவோடு பழகிய நீலநாகர் இளங்குமரனைச் செல்லப் பிள்ளையாகக் கருதியது வெளியே தெரியாமல் பலர் மனத்துக்குள் பொறாமை கொள்ளவும் இடமளித்திருந்தது.

எல்லா மாணவர்களுக்கும் உண்ணவும், தங்கவும், படைக்கலச் சாலையில் உள்ள பிற வசதிகளை அனு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/148&oldid=1141829" இலிருந்து மீள்விக்கப்பட்டது