பக்கம்:மணி பல்லவம் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

151

பட்டிருந்தது. அந்த உடம்பு ‘புலன் அழுக்கற்ற அந்தணாளர்’ என்று வெறுந் துறவிகளைப் புகழ்வார்கள். நீலநாக மறவரோ புலன் அழுக்கற்ற வன்கணாளராக இருந்தார். மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் ‘துரோணர், வீட்டுமர் போன்ற தீரர்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று பூம்புகார் மக்கள் நினைத்துக் கொள்ளவும், பேசிக்கொள்ளவும் தக்கபடி நீலநாக மறவர் ஒப்பற்ற தவவீரராக இருந்தார். மெல்லிய சங்கிலிகளால் பின்னிய இரும்புக் கவசமும் அங்கியும் அணிந்து இளைஞர்க்கு வாளும், வேலும் பயிற்றும் களத்தில் அவர் வந்து நின்று விட்டால் வீரமெனும் பேருணர்வே கம்பீர வடிவெடுத்து வந்து நிற்பது போல தோன்றும். பயிற்சிக் காலங்களில் இரும்பு அங்கி அணியாமல் அவரைக் காண்பது அரிது.

அன்று இளங்குமரனும் நண்பர்களும் தேடிக்கொண்டு சென்றபோது படைக்கலச் சாலையின் மரங்களடர்ந்த உட்பகுதியில் சில இளைஞர்களுக்கு விற்பயிற்சி கற்பித்துக் கொண்டிருந்தார் நீலநாக மறவர். அப்போது கற்பிக்கப் பட்டுக் கொண்டிருந்தது மிகவும் நுண்மையானதொரு விற்கலைப் பயிற்சி. பயிற்சி நடந்து கொண்டிருந்த அந்த இடத்தைச் சுற்றிலும் மாமரங்கள் நிறைந்திருந்தன. நடுவில் தெளிந்த நீரையுடைய சிறு பொய்கை ஒன்றும் இருந்தது. மாமரங்களின் கிளைகளில் கொத்துக் கொத்தாகக் காய்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. காம்புகளின் ஓரமாக இளஞ்சிவப்பும், மஞ்சளுமாக நிறங் கொள்ளத் தொடங்கியிருந்த அந்தக் காய்கள் முதிர்ச்சியைக் காட்டின.

மாமரங்களின் கீழே பொய்கையின் பளிங்கு நீர்ப் பரப்பில் காய்கள் தெரிவதைக் கண்களால் பார்த்துக் கொண்டே வில்லை வளைத்துக் குறிவைத்து மேலே அம்பு எய்து குறிப்பிட்ட ஒரு கொத்துக் காய்களை வீழ்த்த வேண்டும். அங்கே தம்மைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு இப்படி அம்பு எய்தும் விதத்தை முதலில் தாமே ஓரிரு முறை செய்து காட்டிவிட்டுப் பின்பு அவர்களைச் செய்யச் சொல்லி அவர்களால் முடிகிறதா, இல்லையா என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/152&oldid=1141836" இலிருந்து மீள்விக்கப்பட்டது