பக்கம்:மணி பல்லவம் 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

15

அவனிடமிருந்து சொற்கள் வெளிப்பட்டன. அவனுடைய அறைகூவலில் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ் இனத்து ஆண்மை இகழப்படுவதை உணராமலோ அல்லது உணர்ந்தும் வேறு வழியின்றியோ கூடியிருந்த பட்டினப்பாக்கத்துச் செல்வர்களும், செல்வியர்களும் குலுங்கக் குலுங்க நகைத்துக் களிப்படைந்து கொண்டிருந்தனர்.

அப்படிக் களித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் கணீரென்று ஒலி முழங்கி நகைப்புக்களை அடக்கி மேலெழுந்தது அந்தக் கம்பீரமான ஆண்மைக் குரல்!

“பிதற்றாதே! நிறுத்து!” பாய்கின்ற புலிபோல் திரும்பி இந்த இருண்டு சொற்களுக்கும் உரியவன் யார் என்று காணக் கண்களைச் சுழற்றினான் யவன மல்லன். அவனுடைய விழிகள் மட்டுமா சுழன்றன! அல்ல. அங்கே கூடியிருந்த வேல்விழி நங்கையர்கள், நாகரிக நம்பியர்கள் அனைவர் பார்வையும் இந்தத் துணிவான சொற்களைப் பிறப்பித்தவனைத் தேடி விரைந்தன! ஆவலோடு பாய்ந்தன.

அவன்தான்! அந்த அழகிய இளைஞன் இயல்பாகச் சிவந்த தன்முகமே மேலும் சிவக்க நின்றான். அவனுடைய வனப்பு வாய்ந்த கூர்விழிகளில் துணிவின் ஒளி துள்ளியது. தோளோடு போர்த்திருந்த ஒரு பழைய பட்டுப் போர்வையை விலக்கிச் சற்றே கிழிந்த மேலங்கியையும் கழற்றிவிட்டுக் கட்டமைந்த செம்பொன் மேனி சுடர் விரிக்க அவன் முன் வந்தான்; அப்போது அவனுடைய தோள்களில் எத்தனை நூறு வேல்விழிகள் தைத்திருக்கும் என்று. அளவிட்டு உரைப்பதற்கில்லை. அந்த ஒரு விநாடி வேல்விழி நங்கையர் அனைவரும் கண்கள் பெற்ற பயனைப் போற்றியிருப்பார்கள், பெண்களாகப் பிறந்ததற்காகவும் நிச்சயமாகப் பெருமை கொண்டிருப்பார்கள். யவனமல்லனை நோக்கி வீரநடை பயின்ற அவனை “இளங்குமரா நிதானம்! அவன் முரடன்!” என்று அவன் அருகில் நின்ற இளைஞர்களில் ஒருவன் எச்சரிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/16&oldid=1141580" இலிருந்து மீள்விக்கப்பட்டது