பக்கம்:மணி பல்லவம் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மணிபல்லவம்

ரங்கள் எதுவும் அவனிடம் காட்சியளிக்கவில்லை. முத்தும், மணியும், பட்டும் புனைவுமாகச் செல்வத்திமிரைக் காட்டிக் கொண்டு நின்ற பட்டினப்பாக்கத்து இளைஞர்களின், தோற்றத்திலிருந்து வேறுபட்டு எளிமையாகத் தோன்றினான் அவன். அவனைச் சுற்றி சீடர்கள் போல் நின்ற இளைஞர்கள் இடையிடையே மற்போர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவனிடம் ஏதோ கூறிய போதெல்லாம் ‘சிறிது பொறுத்திருங்கள்’ என்று பதறாமல் மெல்லக் கூறினானே தவிர, அவன் உணர்ச்சி வசப்படவில்லை. ஆனால் மற்போரை நன்கு - கூர்ந்து கவனித்து வந்தான். மற்போரை உற்சாகப்படுத்தி நடுநடுவே கூட்டத்தினர் ஆரவாரக் குரலெழுப்பியபோது அதிலும் அவன் கலந்து கொள்ளவில்லை. அலட்சியமான மென்னகை மட்டும் அவனது சிவந்த இதழ்களில் ஓடி மறைந்தது.

மிகவும் வலிமை வாய்ந்த யவன மல்லன் ஒருவன் களத்தில் வெற்றியோடு போர் புரிந்து கொண்டிருந்தான். போர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அவனே வென்று கொண்டிருந்தான். அதே களத்தில் மூன்று தமிழ் மல்லர்களையும், நாகர் இனத்தைச் சேர்ந்த இரண்டு மல்லர்களையும் தோற்கச் செய்து, அந்த வெற்றியாணவத்தில் மேலும் அறைகூவி ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தான் யவன மல்லன். அவனுடைய முகத்திலும், தோள்களிலும் வெற்றி வெறி துடித்தது, செருக்கின்சாயல் தெளிவாய்த் தெரிந்தது. காரணம், அவனால் தோல்வியடைந்த மூன்று தமிழ் மல்லர்களும் சோழ நாட்டிலே சிறந்த மற்போர் வீரர்களெனப் பெயர் பெற்றவர்கள். வெற்றியில் பெருமிதம்தான் இருக்கிறது. ஆனால் வல்லவர்களை வெல்லுவதில் பெருமிதத்தைக் காட்டிலும் இன்னதென்றுகூற இயலாததொரு பேருணர்வும் இருக்கிறது. அந்தப் பேருணர்வில் திளைத்த யவன மல்லன் அறை கூவல் என்ற பேரில் என்னென்னவோ பேசினான். சோழ நாட்டு ஆண்மையையே குறைத்துக் கூறுகிற அளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/15&oldid=1141578" இலிருந்து மீள்விக்கப்பட்டது