பக்கம்:மணி பல்லவம் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

173

எளிதாக நினைப்பவர்களையோ பேசுபவர்களையோ, அவளால் ஏற்க முடிவதில்லை.

உண்டு முடித்தபின் உணவுக் கூடத்திலிருந்து எல்லாரும் வெளியேறியபோது, “வசந்தமாலை! விரைவாக நடந்து வா. சிறிது முன்னால் சென்று உணவுக் கூடத்தின் வாயிலுக்கு அருகே நின்று கவனிக்கலாம். உள்ளிருந்து ஒவ்வொருவராக வெளியேறிப் படிகளில் இறங்கும்போது நீயும், நானுமாக அவர்கள் பாதங்களை நாம் கவனிப்பதை அவர்கள் அறிந்து கொள்ளாதபடி கவனிக்க வேண்டும்” என்று காதருகில் மெல்லச் சொல்லி அவளை வேகமாக நடக்கச் செய்து அவளுடன் வாயிற் பக்கம் வந்து நின்று கொண்டாள் சுரமஞ்சரி. முதலில் தந்தையாரும், தாயும், வானவல்லியும் பிற பெண்களும் படியிறங்கி வந்தார்கள்.

“என்னம்மா? இங்கே எதற்கு நின்று கொண்டிருக்கிறாய்? போகலாம் வா” என்று தந்தையார் அவளைக் கூப்பிட்டார்.

“வருகிறேன் அப்பா நீங்கள் முன்னால் செல்லுங்கள்” என்று அவரை முன்னால் அனுப்பிவிட்டு மேலும் படியிறங்கி வருகிற பாதங்களைக் கவனிக்கத் தொடங்கினாள் சுரமஞ்சரி. ஒவ்வொருவராக எல்லாரும் போய் விட்டார்கள். மணிமார்பனும், நகைவேழம்பரும்தான் வரவில்லை. உள்ளே சமையல்காரர்களோடு ஏதோ பேசிக் கொண்டு நின்றார் நகைவேழம்பர்.

சிறிது நேரத்தில் மணிமார்பனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு நகைவேழம்பர் படியிறங்கி வந்த போதும் சுரமஞ்சரி தோழியோடு அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் அங்கே நின்று கொண்டிருப்பாளென்று அந்த ஒற்றைக்கண் மனிதர் எதிர்பார்க்கவில்லை. அப்போது அங்கே அவள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டபோது சிறிது அதிர்ச்சிகூட அவருக்கு உண்டாயிற்று. சாமர்த்தியமாக அந்த அதிர்ச்சி வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/174&oldid=1141977" இலிருந்து மீள்விக்கப்பட்டது