பக்கம்:மணி பல்லவம் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

175

குழம்பும் உங்களுக்கு எங்கேதான் கிடைத்ததோ?” என்று அவருடைய பாதத்தைச் சுட்டிக்காட்டிச் சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள்.

அதைக் கேட்டு நகைவேழம்பர் மெய்விதிர் விதிர்த்து நடுங்கினாற்போல நின்றார். அவருடைய ஒற்றைக்கண் மிரண்டு பார்த்தது.


23. நாளைக்குப் போது விடியட்டும்!

ந்தப் பின்னிரவு நேரத்தில் பூம்புகாரின் துறைமுகம் ஆரவாரமும் ஆள்பழக்கமும் குறைந்து அமைதியாய்க் காட்சியளித்தது. துறைமுகத்தின் அழகுகள் அமைதியில் தோய்ந்து தோன்றும் காரணத்தினால் பகற்போதில் இருந்ததைக் காட்டிலும் புதிய கவர்ச்சி ஏதோ இப்பொழுது சேர்ந்திருப்பது போல் விநோதமாக விளங்கின. நீலவானத்தின் நெடிய பெருவீதியில் மங்கிய நிலவு உலாச் சென்று கொண்டிருந்தது. அந்தரத்தில் சுடர்விரிக்கும் செந்தழல் மண்டிலம் போல் கலங்கரை விளக்கத்துத் தீ எரிந்தது. அந்த ஒளியில், நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த பெரிய பெரிய கப்பல்கள் கடற்பரப்பெங்கும் தெரிந்தன. மிகப்பெரிய வெண்ணிறப் பறவை ஒற்றைச் சிறகை மட்டும் சாய்த்து விரித்தாற்போல் கப்பல்களின் பாய்மரங்கள் எடுப்பாக இலங்கின.

வேறு ஒலிகளற்ற அமைதியில் கடற்காற்று சுகமாக வீசும் சூழ்நிலையில் துறைமுகப் பகுதியெங்கும் பல்வேறு பொருள்களும், பொருள்களில் மணங்களும் கலந்து நிறைந்திருந்தன. பொதிய மலையிலிருந்து வந்து இறங்கி. யிருந்த சந்தனக் கட்டைகளும், சீன தேசத்திலிருந்து வந்திருந்த பச்சைக் கர்ப்பூரமும், கடற்கரையைத் திருமணம் நிகழும் வீடுபோல் மணக்கச் செய்து கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/176&oldid=1141979" இலிருந்து மீள்விக்கப்பட்டது