பக்கம்:மணி பல்லவம் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

179

எப்படித் தப்பிச் செல்ல விட்டீர்கள்? நீங்கள் கவனமாக இருந்திருந்தால் அவர் தவச்சாலைக்குத் தப்பிச் சென்று அங்கே தீக்கிரையாக நேர்ந்திருக்காதே!” என்று இளங்குமரன் தன்னையும், முல்லையையும் கேட்பான் என்றும் அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்றுகூட அவர் நினைத்து வைத்திருந்தார். ஆனால் அவற்றுக்கெல்லாம் அவசியமில்லாமல் போயிற்று. வீட்டில் முல்லையைத் தவிர வேறு யாருமே அப்போது இல்லை. அவர் வீட்டை அடைந்தபோது விடிவதற்குச் சில நாழிகைகளே இருந்தன.

“என்னப்பா, முனிவர் அகப்படவில்லையா? நீங்கள் மட்டும் தனியாக வந்திருக்கிறீர்களே....?” என்று தூக்கக் கலக்கத்திலும் நினைவாகக் கேட்டாள் முல்லை. சக்கரவாளக் கோட்டத்தில் தம்மைத் துரத்தியவர்கள் கல்லெறிந்ததால் தமது உடலில் உண்டாகியிருந்த சிறுசிறு காயங்களை அந்த இருளில் தம் மகள் கண்டு விடாமல் மறைத்துக் கொள்வதற்கு முயன்றார் அவர்.

“உறக்கம் கெடாமல் நீ தூங்கம்மா. எல்லாம் பொழுது விடிந்ததும் சொல்கிறேன். இப்பொழுது என் மனமே சரியாயில்லை” என்று பெண்ணின் கேள்விக்குப் பிடி கொடுக்காமல் மறுமொழி கூறித் தப்பித்துக் கொண்டார் வளநாடுடையார்.

“முல்லை! இளங்குமரனும், உன் தமையனும் காலையிலிருந்து இதுவரை எங்கேதான் சுற்றுகிறார்களோ? விடிகிற நேரம் ஆகப் போகிறது. இந்திர விழா வந்தாலும் வந்தது. இவர்களுக்கு ஊர் சுற்ற நேரமும் காலமும் இல்லாமலே போய்விட்டது. பாவம்! நீ இவ்வளவு நேரம் தனியாக வீட்டில் இருந்திருக்கிறாயே?” - என்று மகளிடம் வருந்திக் கூறிவிட்டுப் படுக்கச் சென்றார் வளநாடுடையார். ‘தூங்குகிறோம்!’ என்று பேருக்குப் படுக்கையில் புரண்டாரே ஒழிய மனத்தைக் குடையும் நினைவுகளை மீறி உறக்கம் அவரை அணுக மறுத்தது. பொழுது புலர்ந்ததும் இளங்குமரன் முகத்தில் விழித்துச் சிறிதும் தடுமாறாமல் அந்தப் பொய்யை மெய்போல் உறுதியாக எப்படிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/180&oldid=1141983" இலிருந்து மீள்விக்கப்பட்டது