பக்கம்:மணி பல்லவம் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

மணிபல்லவம்

கூறலாம் என்று சொற்களை மனத்தில் வரிசைப்படுத்தும் முயற்சியில்தான் மீண்டும் அவரால் ஈடுபட முடிந்தது. அதோடு அடுத்த புத்த பௌர்ணமி வரையுள்ள கால வெளியில் நீண்ட தொலைவையும் அவர் தம் நினைவு களால் அளக்க முற்பட்டார். முடிவும், விடையும் கிடைக்காது மேலும் மேலும் நீளும் அளவாக இருந்தது அது. மனம் அறியத் தவிக்கும் உண்மைகளுக்கும் தமக்கும் நடுவிலிருந்த கால வெளி பெரிதாகவும் மலைப்பாகவும் தோன்றியது அவருக்கு.

முல்லை தனக்குக் கதவைத் திறந்து விடுவதற்காக எழுந்திருந்துவிட்டு இப்போது நன்றாக உறங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர்.

முல்லை படுத்திருந்த இடத்திலிருந்து தெளிவான குரலில், “நாளைக்குக் காலையில் அவர் இங்கு வந்து விடுவாரா; அப்பா?” என்று கேள்வி புறப்பட்டபோதுதான் தனக்குக் கதவு திறந்து விட்டதனால் கலைந்த தூக்கத்தை அவள் இன்னும் திரும்பப் பெறவில்லை என்று அவருக்குப் புரிந்தது. தான் தூங்கிப் போய்விட்டதாக அவள் நினைத்துக் கொள்ளட்டுமென்று முதலில் அவளுக்குப் பதில் பேசாமலிருந்துவிட எண்ணினார் அவர். ஆனால் மகள் விடவில்லை. மீண்டும் அவரைக் கேட்டாள்.

“உங்களைத்தான் கேட்கிறேனப்பா! நாளைக் காலை யில் அவர் இங்கு வந்துவிடுவாரா?”

கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பெண்ணை ஏமாற்றும் துணிவு இரண்டாம் முறையும் அவளிடமிருந்து கேள்வியெழுந்தபோது தளர்ந்து விட்டது. மௌனத்தைக் கலைத்து விட்டு வாய் திறந்தார் அவர்.

“எவரைச் சொல்கிறாய் முல்லை ?”

“அவரைத்தான் அப்பா. அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் புதல்வர் நாளைக் காலையில் இங்கு வருவாரா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/181&oldid=1141984" இலிருந்து மீள்விக்கப்பட்டது