பக்கம்:மணி பல்லவம் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

மணிபல்லவம்

மலர்ந்த மார்பில் அலர்ந்து நெளிந்த முல்லை மாலையும் சேர்ந்து கொண்டு சிரிப்பது போல் தோன்றியது. அந்தச் சிரிப்பையும் வெற்றியையும் கூட்டத்திலிருந்த சில யவனர்கள் மட்டும் அவ்வளவாக விரும்பவில்லை போலத் தோன்றியது. அங்கே கூடியிருந்த கூட்டம் சிறிது கலைந்து போவதற்கு வழி ஏற்பட்டபோது அவனும், அவனுடைய நண்பர்களும் மணற்பரப்பில் நடக்கத் தொடங்கினர். அப்போது வழியையே மறிப்பது போல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது அந்தச் சித்திரப் பல்லக்கு. நுண்ணிய பூ வேலைப்பாடுகள் அமைந்த பல்லக்கின் ஓவியத் திரை விலகியது. வளைகள் குலுங்கும் செந்நிற முன்கை ஒன்று நீண்டது. அந்தக் கையின் மெல்லிய நீண்ட காந்தள் விரல்களில் பேரொளி நிறைந்ததும் விலை வரம்பற்றதும் நவமணிகளால் தொகுக்கப்பட்டதுமான மணிமாலை ஒன்று இலங்கியது. அந்த மாலை ஏந்திய செந்தாமரைப் பூங்கரம் இளங்குமரனுடைய முகத்திற்கு முன் நீண்ட போது அவன் ஒன்றும் புரியாது திகைத்தான். நிமிர்ந்து பார்த்தபோது பல்லக்கினுள்ளிருந்து அந்த இளநங்கை முகத்திலும், கண்களிலும், இதழ்களிலும், எங்கும் சிரிப்பின் மலர்ச்சிதோன்ற எட்டிப் பார்த்தாள். பல்லக்கினுள்ளிருந்து பரவிய நறுமணங்களினாலும், திடீரென்று ஏற்பட்ட அந்தச் சந்திப்பினாலும் சற்றே தயங்கி நின்றான் இளங்குமரன். சொல்லைக் குழைத்து உணர்வு தோய்த்த மெல்லினிமைக் குரலில் அவள் கூறலானாள்.

“இந்தப் பரிசை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேணும்.”

“எதற்காகவோ...?”

“பெருவீரமும் வெற்றியும் உடையவர்களைப் பரிசளித்துப் போற்றும் பெருமையை அடையும் உரிமை இந்தப் பூம்புகார் நகரத்தில் ஒவ்வொருவருக்கும் உண்டு! எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகிற இந்திர விழாக்காலத்தில் இப்படிப் பரிசளிக்கும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்தற்காக நான் பெருமைப்படுகிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/19&oldid=1141583" இலிருந்து மீள்விக்கப்பட்டது