பக்கம்:மணி பல்லவம் 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

199

கீழிருந்து மேலே போகும் படிகளில் முதல் பத்துப் பன்னிரண்டு படிகள் வரை ஒரே இருட்டாயிருந்தது. அப்பாலுள்ள படிகளில் மேல் மாடத்து விளக்கொளி இலேசாக மங்கிப் பரவியிருந்தது. தயங்கியபடியே சிறிது நேரம் நின்ற பின், ‘விளைவு என்ன ஆனாலும் சரி! நான் மேலே சென்று சுரமஞ்சரியைப் பார்த்து இளங்குமரன் மடலைத் திருப்பியளித்து அவமானப்படுத்திய விவரத்தைச் சொல்லிவிட வேண்டியதுதான்’ என்று உறுதி செய்து கொண்டு படிகளில் ஏறினான் மணிமார்பன்.

முதற்படியிலிருந்து இரண்டாவது படிக்கு அவன் ஏறியபோது படியோரத்து இருளிலிருந்து யாரோ அவன் வாயை இறுகப் பொத்தி மோதித் தரையில் தள்ளுவது போல் கீழ்ப் புறம் இறக்கி இழுத்துக் கொண்டு வரவே, அவன் உடலில் இரத்தம் உறைந்து உணர்வு மரத்துப் போகத் தொடங்கியது. அவன் திமிறிக் கொண்டு ஓடவோ கூச்சலிடவோ இடங்கொடுக்காத முரட்டுக் கைகளாக இருந்தன அவை.

சிறிது தொலைவு கொலைத் தழும்பேறினவை போன்ற அந்தக் கைகளின் பிடியில் இறுகிக் கொண்டே வந்தபின் சற்றே ஒளி பரவியிருந்த ஓரிடத்தில் கண்களை அகலத் திறந்து பார்த்தபோது, நகைவேழம்பரின் முகம், “கூச்சலிட்டாயானால் அநாவசியமாக இப்போது இந்த இடத்தில் ஒரு கொலை விழ நேரிடும்” என்று அவன் காதருகே குனிந்து வாய் திறந்து கூறினார். வாயைப் பொத்தியிருந்த கையை எடுத்துவிட்டு இடுப்பிலிருந்து குறுவாள் ஒன்றை எடுத்து அவன் கழுத்தின் மிக அருகில் சொருகிவிடப் போவதுபோல் பிடித்துக் காட்டினார் அவர். பகலிலேயே பூத பயங்கரம் காட்டும் அந்த முகம் இப்போது இரவில் இன்னும் குரூரமாகத் தோற்றமளித்தது - மணிமார்பனுக்குச் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன. ‘வெளியேறிச் சென்று விடுவதற்கு ஓர் அற்புதமான வாய்ப்புக் கிடைத்திருந்தும் பயன்படுத்திக் கொண்டு தப்பிப் போகாமல் மறுபடியும் திரும்பி இந்த மாளிகைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/200&oldid=1142006" இலிருந்து மீள்விக்கப்பட்டது