பக்கம்:மணி பல்லவம் 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

மணிபல்லவம்

ஏன் வந்து தொலைத்தோம்?’ என்று வருந்தினான் அவன். நகைவேழம்பருடைய பிடி இழுத்த இழுப்புக்கு மீறாமல் அவன் சவம்போல் இழுபட்டுக் கொண்டு போனான்.

மாளிகைத் தோட்டத்தின் அடர்த்தியான ஒரு பகுதிக்குச் சென்று அடித்துப் போடுவது போல பிடியை உதறி அவனைக் கீழே தள்ளினார் அவர். ஓவியன் நடுங்கின படியே தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து நின்றான்.

“எங்கே போயிருந்தாய் இவ்வளவு நேரம்? உண்மையை மறைக்காமல் அப்படியே சொல்.”

“சொல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் ஓவியன்.

“புதிதாக ஒன்றும் செய்துவிட மாட்டேன். இதோ இந்த இரண்டு கைகளின் பிடியில் இவற்றுக்கு உரியவனை இதுவரை எதிர்த்திருக்கிறவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேருடைய உயிர்களும் எப்படித் துடிதுடித்துச் செத்திருக்கின்றன என்பது உனக்குத் தெரியாது. நீ விரும்பினால் அந்த அனுபவத்தை உனக்கும் அளிப்பதற்கு எனக்குச் சம்மதம்தான்!”

“கொலைகாரனுக்குத் தற்புகழ்ச்சி ஒரு கேடா?”

“போர்க்களங்களில் நிறைய கொலைகள் செய்தவர்களை வீரர் என்றுதானே சொல்கிறார்கள்? அப்படியானால் இன்று உன்னையும் சேர்த்து நான்...”

“போதும் உங்கள் கொலை பெருமை! தெரிந்துதானே கடவுள் உங்கள் முகத்தின் இலட்சணத்தைக் கொலை செய்து வைத்திருக்கிறார்?”

“சந்தேகமென்ன? என் கைகளில் அகப்பட்டிருந்தால் அந்தக் கடவுளையும்...” என்று குரூரமாகச் சிரித்தார் நகைவேழம்பர். அந்த விகார மனிதர் நாத்திகத் தழும்பேறிய மனத்தையுடையவர் என்று தோன்றியது மணிமார்பனுக்கு. எதையும் செய்யக்கூசாத கொடூர சித்தமுடையவர் என்பது அவரைப் பார்த்தாலே தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/201&oldid=1142007" இலிருந்து மீள்விக்கப்பட்டது