பக்கம்:மணி பல்லவம் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231

நா. பார்த்தசாரதி

விட்டாள். அந்த உறுதியையும், முடிவையும் அவள் இனிமேல் யாருக்காகவும் இறுமாப்போடு கூடிய அழகை வெற்றி கொள்வதற்காகத் தன்னுடைய இறுமாப்பை இழந்துவிட நேருமானாலும் அவள் அந்த இழப்பை ஏற்றுக் கொள்ளத் துணிந்திருந்தாள். காதலில் இழப்பதும், தோற்பதும், விட்டுக் கொடுப்பதும் கூட வெற்றிகள்தானே?

இவ்வாறு கையில் கசங்கிய தாழை மடலும், நெஞ்சில் மணக்கும் நினைவுகளுமாக நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி, ‘படுத்துக் கொள்ளப் போகலாமே அம்மா’ என்று வசந்தமாலை அழைத்தபோதுதான் தன் நினைவு பெற்றாள்.

மென்மையான பூக்களைக் குவித்து அவற்றின்மேல் படுத்துறங்குவது போல் பட்டு மெத்தை விரித்த மஞ்சத்தில் பஞ்சணைகளிற் சாய்ந்து படுத்தபோது சோர்ந்து களைத்த அவள் உடல் சுகம் கண்டது. ‘இதே வேளையில் படைக் கலச்சாலையின் கரடு முரடான தரையில் எங்காவது ஒரு மூலையில் இளங்குமரனின் பொன்னுடல் புரண்டு கொண்டிருக்கும்’ என்று நினைத்தபோது தானும் மஞ்சத்திலிருந்து கீழிறங்கி வெறுந்தரையில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இளங்குமரன் எங்கெங்கே எந்தெந்த நேரங்களில் என்னென்ன வசதிக் குறைவுகளை அனுபவித்துத் துன்பப்பட்டுக் கொண்டிருப்பானோ அவ்வளவையும் தானும் தனக்கு ஏற்படுத்திக் கொண்டு துன்பத்தை அனுபவிக்க வேண்டும் போல மனத்துடிப்பு அடைந்தாள் சுரமஞ்சரி.

அருகில் வசந்தமாலை இருந்ததனால் வெறுந்தரையில் படுக்கும் எண்ணத்தை அன்றிரவு அவள் நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை. வெறுந்தரையில் படுத்தால் வசந்த மாலை ‘ஏன்’ என்று கேட்பாள். ‘இளங்குமரன் அங்கே வெறுந்தரையில் படுத்திருப்பார். அதனால்தான் நானும் இங்கே வெறுந்தரையில் படுத்துக் கொள்கிறேன்’ என்று வெட்கத்தைவிட்டு அவளுக்குப் பதில் சொல்லமுடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/232&oldid=1142047" இலிருந்து மீள்விக்கப்பட்டது