பக்கம்:மணி பல்லவம் 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

235

ஆடும் ஓசையையும் தவிர மருவூர்ப் பாக்கத்தின் கடலோரத்து இடங்களில் வேறு ஒலிகள் இல்லை. எப்போதும் ஆள்பழக்கம் மிகுந்து தோன்றும் நீலநாகர் படைக்கலச் சாலையில்கூட அன்று பெரும் அமைதி நிலவியது. படைக்கலச் சாலையைச் சேர்ந்த இளைஞர்கள் எல்லாரும் கழார்ப் பெருந்துறைக்குப் போய்விட்டார்கள். நீலநாக மறவரும் அன்று ஊரில் இல்லை. காவிரிப்பூம் பட்டினத்துக்கு அருகில் சிற்றரசர் குடியினரான வேளிர்களின் நகரம் ஒன்று இருந்தது. அந்த நகரத்துக்குத் திருநாங்கூர் என்று பெயர். சிறப்புக்குரிய குறுநில மன்னர் மரபினரான நாங்கூர் வேளிர்களின் தலைநகராகிய அவ்வூரில் நீலநாக மறவருக்கு ஞான நூல்களைக் கற்பித்த முதுபெரும் புலமை வாய்ந்த ஆசிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த முதுபெரும் புலவருக்கு நாங்கூர் அடிகள் என்று பெயர் ஆண்டு தோறும் சித்திரைத் திங்களில் இந்திரவிழா முடியும் போது நாங்கூர் அடிகளைச் சந்தித்து வணங்கி வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வருவது நீலநாக மறவரின் வழக்கம். பூம்புகாரின் மக்கள் காவிரியின் குளிர் புனலாடிக் களிமகிழ் கொண்டு திரியும் இந்திரவிழாவின் இறுதி நாட்களில் நீலநாக மறவர் நாங்கூரில் வயது மூத்துத் தளர்ந்த தன் ஆசிரியருக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டிருப்பார். அவ்வாறு தம் ஆசிரியருக்குப் பணிவிடைகள் புரியும் காலத்தில் தாம் சோழ நாட்டிலேயே இணையற்ற வீரர் என்பதையும், தம்முடைய மாபெரும் படைக்கலச் சாலையில் தாம் பல மாணவர்களுக்கு ஆசிரியர் என்பதையும் அவர் மறந்து விடுவார். தம்மை ஆசிரியராக்கிய ஆசிரியருக்கு முன்பு தாம் என்றும் மாணவ நிலையில் இருக்க வேண்டுமென்ற கருத்து அவருக்கு எப்போதும் உண்டு. அந்தக் கருத்திலிருந்து அவர் மனம் மாறுபட்டதே கிடையாது.

அந்த ஆண்டிலும் இந்திரவிழாவின் இறுதி நாளுக்கு முதல் நாள் காலையிலேயே படைக்கலச் சாலையைச் சேர்ந்த தேரில் திருநாங்கூருக்குப் புறப்பட்டுப் போயிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/236&oldid=1143279" இலிருந்து மீள்விக்கப்பட்டது