பக்கம்:மணி பல்லவம் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

மணிபல்லவம்

தங்குவதற்குத் தொடங்கி விட்டார்கள். நகரமே வெறுமையாகிக் காவிரிக் கரையில் குடியேறிவிட்டது போல் தோன்றியது. கடுமையான வேனிற்காலத்தில் குளிர்ந்த பொழில்களிலும் நதிக்கரையிலும், வசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் நகர மக்கள் அதை அனுபவிக்காமல் விடுவார்களா? காவிரிக் கரையில் சித்திரக் கூடாரங்களும், கூரை வேய்ந்த கீற்றுக் கொட்டகைகளும் அமைத்துத் தங்கி மறுநாள் பொழுது விடிவதையும் நீராட்டுவிழா இன்பத்தையும் ஒருங்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் நகர மக்கள்.

கழார்ப் பெருந்துறைக்குச் செல்லும் சோலைசூழ் சாலையின் இருபுறமும் தேர்களும் பல்லக்குகளும் யானைகளும், குதிரைகளும், வேறு பல சித்திர ஊர்திகளும் நிறைந்திருந்தன. குளிர்ச்சியும் பூஞ்சோலைகளின் நறுமணமும் மிகுந்து விளங்கும் இந்தச் சாலையைத் தண்பதப் பெருவழி என்றும், திருமஞ்சனப் பெருவழி என்றும் இதன் சுகத்தையும் இன்பத்தையும் உணர்ந்த பூம்புகார் மக்கள் பேரிட்டு அழைத்துப் போற்றி வந்தார்கள். காவேரியின் நீரோட்டத்தைத் தழுவினாற்போல் அமைந்த காரணத்தினால் எக்காலத்திலும் சில்லென்று தன்மை பரவித் தங்கிய சாலையாயிருந்தது இது. அதனால்தான் ‘தண்பதப் பெருவழி’ என்று பெயரும் பெற்றிருந்தது. திருமஞ்சனம் என்றால் மங்கல நீராடல் என்று பொருள். பலவிதமான மங்கல நீராடல்களுக்கும் இந்தத்துறை இடமாக இருந்தது. காவிரித் துறைக்குப் போய் நீராடுவது ஒருபுறமிருக்க நீராடுவதற்காக இந்தச் சாலையின் வழியே நடந்து போகும் போது உடம்பு நீராடின சுகத்தை உணர்ந்து விடும். அத்தனைக் குளிர்ச்சியான இடம் இது!

நகரின் கிழக்குப் பகுதியாகிய மருவூர்ப் பாக்கத்து மக்கள் மேற்குப் பகுதியாகிய காவிரித்துறையிற் சென்று தங்கிவிட்டதனால் மருவூர்ப் பாக்கமும் கடற்கரைப் பகுதிகளும், வழக்கத்துக்கு மாறான தனிமையைக் கொண்டிருத்தன. கடல் அலைகளின் ஓலமும் காற்றில் மரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/235&oldid=1142050" இலிருந்து மீள்விக்கப்பட்டது