பக்கம்:மணி பல்லவம் 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

மணிபல்லவம்

மரக்கூட்டங்களுமாகப் பசுமைக் கோலங் காட்டியது அந்த ஊர். வெயில் நுழையவும் முடியாத பசுமைக்குள் மறைந்திருந்த அழகு காரணமாக நாங்கூருக்குப் ‘பொழில் நகரம்’ என்றே சோழ நாட்டுக் கவிஞர்கள் புகழ்ப் பெயர் சூட்டியிருந்தார்கள்.

நாங்கூரின் வீரப் பெருமைக்குக் காரணமாக இருந்தவர்கள் அங்கு வாழ்ந்து வந்த வேளிர்கள் என்றால் ஞானப் பெருமைக்குக் காரணமாயிருந்தவர் “பூம்பொழில் நம்பி” என்னும் பெரியவரே ஆவார். பூம்பொழில் நம்பியைத் திருநாங்கூர் அடிகள் என்ற பெயரில் சோழ நாடெல்லாம் அறியும். சமய நூல்களிலும், தத்துவ ஞானத்திலும், பழுத்துப் பண்பட்டக் குணக்குன்று அவர், காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து தொடங்கி நாங்கூருக்குச் செல்லுகிற பெருவழி அவ்வூர் எல்லையுள் நுழையுமிடத்தில் பூம்பொழில் என்றொரு குளிர்ந்த சோலை இருந்தது. அந்தச் சோலையில்தான் முதுபெருங் கிழவரும், துறவியுமாகிய நாங்கூர் அடிகள் வசித்து வந்தார். வயதும், உடலும், அறிவும் முதிர்ந்தாலும் கபடமில்லாத குழந்தை மனம் கொண்டவர் திருநாங்கூர் அடிகள். சோழ நாட்டில் அந்த நாட்களில் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த சமயவாதிகளும், அறிஞர்களும், புலவர் பெருமக்களும், தம்முடைய மாணவர்கள் என்பதை உணர்ந்திருந்தும் அதற்காக அடிகள் இறுமாப்பு அடைந்ததேயில்லை. நேரில் தம்மைப் புகழுவோரிடம் எல்லாம், “இயற்கை தான் பெரிய ஆசிரியன்! அதனிடமிருந்து நான் எவ்வளவோ கற்றுக் கொண்டேன். இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பூம்பொழிலில் எத்தனையோ நாட்களாகச் செடிகள் தளிர் விடுகின்றன். அரும்புகின்றன. பூக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இவை எனக்குப் புதுமையாகவே தோன்றுகின்றன. கண்களிலும், மனத்திலும் சலிப்புத் தோன்றாமல் பார்த்து நினைத்து உணர்ந்தால் இயற்கையே பெரிய ஞானம்தான்” என்று குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/255&oldid=1142070" இலிருந்து மீள்விக்கப்பட்டது