பக்கம்:மணி பல்லவம் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

253

எல்லோருடைய உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும். இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்த துறையருகே வந்ததும் இளங்குமரனும், கதக்கண்ணனும் தத்தம் குதிரைகளை நிறுத்திக் கொண்டு அவற்றில் அமர்ந்தபடியே பார்க்கலாயினர்.

அவலை வாய் நிறைய அடக்கிக் கொண்டு, பெண்கள் கூட்டம் ஒன்று காவிரி நீர்ப்பரப்பில் வரிசையாக அணிவகுத்துப் புறப்பட்டு நீந்தியது. அந்த வரிசையில் பன்னிரண்டு பெண்கள் நீந்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிது தொலைவு சென்றபின் இளங்குமரன் மறுபடியும் எண்ணிப் பார்த்தபோது பதினோரு பெண்கள்தான் தெரிந்தனர். “யாரோ ஒருத்தி நீரில் மூழ்கியிருக்க வேண்டும். அல்லது சுழலில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும்” என்று தோன்றியது. தனக்குத் தோன்றியதைக் கதக்கண்ணனிடம் கூறினான் இளங்குமரன். “நீரில் மூழ்கியிருந்தாலுமே நாம் என்ன செய்ய முடியும்” என்று கதக்கண்ணன் பதில் சொன்னான். “என்னால் அப்படி நினைத்துப் பேசாமல் இருக்க முடியாது! அப்புறம் நானும் ஆண் பிள்ளை என்று நிமிர்ந்து, நடக்க என்ன இருக்கிறது?” என்று கூறிக் கொண்டே, குதிரையிலிருந்து கீழே குதித்து விரைந்தான் இளங்குமரன், ‘வேண்டாம் போகாதே’ என்று நண்பன் தடுத்துக் கூறியதை அவன் கேட்கவில்லை.


34. திருநாங்கூர் அடிகள்

பூம்புகாரின் ஆரவாரமும், வாழ்க்கை வேகமும் சோழர் பேரரசின் தலைநகரமென்ற பெருமையும் நாங்கூருக்கு இல்லாவிட்டாலும் அமைதியும் அழகுங் கூடியதாயிருந்தது அந்தச் சிறு நகரம். எங்கு நோக்கிலும் பசும் புல்வெளிகளும் வெறுமண் தெரியாமல் அடர்ந்த நறுமண மலர்ச் சாலைகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/254&oldid=1142069" இலிருந்து மீள்விக்கப்பட்டது