பக்கம்:மணி பல்லவம் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

மணிபல்லவம்

காவிரியில் நீராடுவதற்காகத் தோழிகள் வாசனைத் தைலங்கள் பூசவும், ஆலவட்டம் வீசவும், பட்டுக்குடை பிடிக்கவும், பணிப்பெண்கள் புடைசூழச் செல்வக்குடி நங்கையர்கள் அலங்காரமான சூழ்நிலையின் நடுவே விளங்கித் தோன்றினர். தங்களுக்கு நீந்தத் தெரியாததனால் தோழிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒருவரோடொருவர் கரங்கோத்தபடி நீரில் இறங்கின செல்வப் பெண்களைக் கரையிலிருந்த நீந்தத் தெரிந்த பெண்கள் நகைத்து ஏளனம் செய்தனர். தண்ணீரில் இறங்க மனமின்றிச் சாரலில் நனைந்து கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தவர்களை அவர்கள் நண்பர்கள் பின்புறமாக வந்து பிடித்துத் தள்ளி வேடிக்கை பார்த்தார்கள். மற்றொரு புறத்தில் ஆண்களும் பெண்களுமாக இளம் பருவத்தினர் சிறுசிறு படகுகளை விரைந்து செலுத்தி எவரால் வேகமாகப் படகு செலுத்த முடிகிறதென்று தங்கள் திறமையைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். தண்ணீர்ப் பரப்பிலேயே மிதக்கும் சிறு வீடுகளை போல் அணி செய்து அமைக்கப்பட்டிருந்த நீரணி மாடம் என்னும் படகு இல்லங்களில் மிதந்து சென்று நீராட்டு விழாவை அனுபவித்து கொண்டிருந்தார்கள் சிலர்.

[1] வாயில் நிறைய அவலை அடக்கிக் கொண்டு வாயையும் திறக்காமல் நீரையும் குடிக்காமல் உள்ளே அவலை மென்று தின்று கொண்டே வேகமாக நீந்தும் விளையாட்டு ஒன்றைப் பெண்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்படி நீந்தி முதலில் வருகிற வருக்கு வெற்றி என்று முடிவு செய்வது வழக்கம். இந்த விளையாட்டு நிகழ்த்து கொண்டிருந்த துறையில் பெண் களின் கூட்டம் கணக்கற்றுக் கூடியிருந்தது. துறையரு கிலும் மணற் பரப்பிலும், எங்கும் அவல் சிதறிக் கிடந்தது; ஆவலும் பரவித் தெரிந்தது.


  1. இப்படி மகளிர் விளையாடும் ஆடல் ஒன்று அக்காலத்திலிருந்ததைப் புறநானூறு 63-வது பாடல் கூறும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/253&oldid=1142068" இலிருந்து மீள்விக்கப்பட்டது