பக்கம்:மணி பல்லவம் 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

283

அவனுடைய செய்கையால் அவர் சிறிதும் அதிர்ச்சியோ', அச்சமோ அடைந்ததாகவே தோன்றவில்லை. அமைதியாக நகைத்துக் கொண்டே நின்றார்.

“புத்தஞாயிறு தோன்றுங் காலத்தில் உலகத்தில் பசி, பிணி, துன்பம் ஒன்றுமே இல்லாமற் போகும் என்று சற்று முன் நீங்கள் கூறியது மெய்தானா அடிகளே?”

“மெய்தான்; இதில் உனக்குச் சந்தேகம் ஏன்?”

“அப்படியானால் இப்போது என்னோடு நான் கூப்பிடுகிற இடத்துக்கு வாருங்கள், அடிகளே!” என்று கூறிக்கொண்டே அவரைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு விரைந்து நடந்தான் இளங்குமரன். அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்க இயலாத துறவி அவனுடன் இழுபடுவதுபோல் தட்டுத் தடுமாறி விரைந்தார்; இந்த வம்பு எதில் போய் முடிகிறதென்று காணும் ஆவலினால் கூட்டத்தில் சிலரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். இளங்குமரனுக்கும், துறவிக்கும் பின்னால் ஒரு பெரிய கூட்டமே தொடர்ந்து நடந்து வரத் தொடங்கியிருந்தது. உலக அறவியின் பொது அம்பலத்துக்குள் நுழைந்து அங்கே பசிப் பிணியாலும், வறுமை வேதனைகளாலும் நொந்து கூடியிருந்த ஏழமைக் கூட்டத்தை அந்தத் துறவிக்குச் சுட்டிக் காண்பித்தான் இளங்குமரன்.

“இவர்களைப் போன்றவர்களைக் கண்டு, இவர்களைப் போன்றவர்களின் துன்பங்களிலிருந்து தான் உங்கள் புத்தருக்கு ஞானம் பிறந்தது. ஆனால் இவர்களைப் போன்றவர்களின் பசியும், நோவும் தீர வழிதான் இன்னும் பிறக்கவில்லை. இவர்களைப் போன்றவர்கள் தலைமுறை தலைமுறையாக இன்னும் உலகத்தில் இருக்கிறார்கள். நோயும், நொடியும், பசியும், பாவமும் இவர்களோடு வழி முறை வழிமுறையாக இருக்கின்றன. நீங்களோ இந்திர விகாரத்து வாயிலில் நின்று கொண்டு புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகமே சுவர்க்க பூமியாக மாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/284&oldid=1142108" இலிருந்து மீள்விக்கப்பட்டது