பக்கம்:மணி பல்லவம் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மணிபல்லவம்

பேய்பூத நிகழ்ச்சி இவற்றில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை. சம்பாபதி வனத்திலோ, சக்கரவாளத் தோட்டத்துச் சுற்றுப் புறங்களிலோ பேய் பூதங்கள் பழகுவதாகச் சிறு வயதில் அவன் இளம் நண்பர்கள் கதை அளந்தால் அதைப் பொறுத்துக் கொண்டு அவனால் சும்மா இருக்க முடியாது.

“பேய்களாவது பூதங்களாவது? நள்ளிரவுக்கு மேலானாலும் தாங்களும் உறங்காமல் பிறரையும் உறங்க விடாமல் வன்னி மரத்தடியில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் கபாலிகர்களும், புறநகர்ப் பகுதிகளில் காவலுக்காகத் திரியும் ஊர்க்காப்பாளர்களும்தான் பேய்கள் போல் இரவில் நடமாடுகிறார்கள். வேறு எந்தப் பேயும், பூதமும் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை” என்று அத்தகைய நேரங்களில் நண்பர்களை எள்ளி நகையாடியிருக்கிறான் அவன்.

அவனே இப்போது மருண்டான்; தயங்கினான்; ஒன்றும் புரியாமல் மயங்கினான். ஆனால் அந்த மயக்கமும் தயக்கமும் தீர்ந்து உற்றுப் பார்த்தபோதுதான் உண்மை புரிந்தது. இருபுறமும் தன் தோளில் சொருகி விடுகிறாற்போல் அவர்கள் நெருக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவை நாகப் பாம்புகள் அல்ல; பாம்பு படமெடுப்பது போல் கைப்பிடிக்கு மேற்பகுதி அமைந்ததும் அதனுடல் நெளிவதுபோல் கீழ்ப்பகுதி அமைந்ததுமான கூரிய வாள்கள் என்று தெரிந்தது. அந்தக் காலத்தில் சோழ நாட்டில் இத்தகைய அமைப்புள்ள சிறுபடைக் கலங்களைப் பயன்படுத்துகிறவர்கள் காவிரிப்பூம் பட்டினத்திலும் சுற்றுப் புறத்துக் காடுகளிலும் வாழ்ந்த எயினர் எனப்படும் ஒருவகை முரட்டு நாகமரபினர் என்பதும் அவனுக்குத் தெரியும். எயினர் பிரிவைச் சேர்ந்த நாகர்கள் அரக்கரைப்போல் வலிமை உடையவர்களென்றும் உயிர்க் கொலைக்கு அஞ்சாதவர்களென்றும் அவன் கேள்விப் பட்டிருந்தான். சூறையாடுதலும், கொள்ளையடித்தலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/31&oldid=1141629" இலிருந்து மீள்விக்கப்பட்டது