பக்கம்:மணி பல்லவம் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மணிபல்லவம்

குறுகுறுப்பான இயல்புக்குமுன் எவ்வளவு கடுமையான சுபாவமுள்ளவருக்கும் அவளிடம் சிரித்து விளையாடிப் பேசவேண்டுமென்று தோன்றுமே ஒழிய கடுமையாகவோ, துயரமாகவோ இருந்தாலும் அவற்றுக்குரிய பேச்சு எழாது. அவளிடமிருந்த அற்புதக் கவர்ச்சி அது. அதனால்தானோ என்னவோ, இளங்குமரனும் சிரிப்பும் கலகலப்புமாக அவளிடம் பேசினானே தவிர உண்மையில் கதக்கண்ணனுடைய வீட்டுக்குள் நுழையும் போதும் சரி, நுழைந்த பின்னும் சரி, அவன் மனம் மிகவும் குழம்பிப் போயிருந்தது.

முல்லையும் இளங்குமரனும் செய்த உபசாரங்களை ஏற்றுக் கொண்டு முனிவர் தெளிவு பெற்றுக் கண்விழித்த போது, இரவு மூன்றாம் யாமத்துக்கு ஓடிக் கொண்டிருந்தது. “முல்லை முதலில் நீ போய் உறங்கு. மற்றவற்றைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம். உனக்கு நிறையத் தொல்லைக் கொடுத்துவிட்டேன்” என்று இளங்குமரன் அவளை அனுப்ப முயன்றும் அவள் விடுகிற வழியாயில்லை.

“உங்கள் காயங்களை மறந்துவிட்டீர்களே? ஆறினால் தானே விழுப்புண் என்று பெருமை கொண்டாடலாம். பச்சைக் காயமாகவே இருந்தால் அந்தப் பெருமையும் கொண்டாட முடியாதே!” என்று கூறி நகைத்தாள் முல்லை. அதன் பின் அவன் காயங்களுக்கு மருந்து கொடுத்துப் போட்டுக் கொள்வதையும் இருந்து பார்த்து விட்டுத்தான் அவள் படுக்கச் சென்றாள். படுத்தவுடன் அயர்ந்து நன்றாக உறங்கிவிட்டாள். இரண்டு, மூன்று நாழிகைத் தூக்கத்துக்குப் பின் அவளுக்கு அரைகுறையாக ஒரு விழிப்பு வந்தபோது, மிக அருகில் மெல்லிய குரலில் யாரோ விசும்பி அழுகிற ஒலி கேட்டுத் திகைத்தாள். திகைப்பில் நன்றாக விழிப்பு வந்தது அவளுக்கு. சிலம்பும் வளைகளும் ஒலிக்காமல் கவனமாக எழுந்து பார்த்தாள். இளங்குமரனும், அருட்செல்வ முனிவரும் படுத்திருந்த பகுதியிலிருந்து அந்த ஒலி வருவதாக அவளுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/41&oldid=1141642" இலிருந்து மீள்விக்கப்பட்டது