பக்கம்:மணி பல்லவம் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

39

“ஒரு சண்டையென்ன? பொழுதுபோனால், பொழுது விடிந்தால் சண்டைகளாகத்தான் இருக்கிறது என்பாடு அதைப் பற்றியெல்லாம் அப்புறம் விரிவாகப் பேசிக் கொள்ளலாம்; முதலில் முனிவருடைய மயக்கத்தைப் போக்கி அவருக்குத் தெளிவுவரச் செய்ய வேண்டும். அதற்கு உன்னுடைய உதவிகள் தேவை! உன் தந்தையாரை எழுப்பாதே. அவர் நன்றாக உறங்கட்டும். நீ மட்டும் உன்னால் முடிந்தவற்றைச் செய்தால் போதும்...”

“முனிவருக்கு மட்டுந்தானா? நீங்கள் கூடத்தான் ஊமைக் காயங்களாக மார்பிலும், தோளிலும் நிறைய வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவைகளுக்கும் மருந்து போட்டுத்தானே ஆகவேண்டும்?”

“மார்பிலும் தோளிலும் காயம் படுவது பெருமைதான் முல்லை! அவற்றை விழுப்புண்கள் என்று புகழின் முத்திரைகளாகக் கணக்கிடுகிறார்கள் இலக்கிய ஆசிரியர்கள்!”

“கணக்கிடுவார்கள், கணக்கிடுவார்கள்! ஏன் கணக்கிட மாட்டார்கள்? புண்ணைப் பெறுகிறவன் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால் அப்புறம் சோம்பல் இல்லாமல் புகழ்கிறவர்களுக்கு என்ன வலிக்கிறதாம்?” என்று சிரித்தவாறே கூறிவிட்டுப் பம்பரமாகச் சுழன்று காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினாள் முல்லை. சிலம்பும், வளைகளும் ஒலித்த விரைவிலிருந்து அவள் எவ்வளவு வேகமாக மருந்தரைக்கிறாள், எவ்வளவு வேகமாகச் சுடுநீர் வைக்கிறாள் என்பதை நினைத்து வியந்தவாறே முனிவரின் கட்டிலருகே இருந்தான் இளங்குமரன். நடுநடுவே முனிவர் முனகினார். கனவில் உளறுவது போல் சொற்கள் அரைகுறையாக வெளிவந்தன. அந்தச் சொற்களைத் திரட்டி, “பாவிகளே! என்னைக் கொல்லாதீர்கள், உங்கள் தீமைகளுக்கு உங்களை என்றாவது படைத்தவன் தண்டிக்காமல் விடமாட்டான்! பாவிகளே...” என்று இளங்குமரன் ஒருவிதமாகக் கூட்டி உணர முயன்றான். முல்லையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/40&oldid=1141639" இலிருந்து மீள்விக்கப்பட்டது