பக்கம்:மணி பல்லவம் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மணிபல்லவம்

பொதுவில் அவளுக்கு அதைக் கேட்டதிலிருந்து ஏதோ திகைப்பாகவும் பயமாகவுமிருந்தது.


5. பூதசதுக்கத்திலே ஒரு புதிர்!

ழிற்பூம்புகார் நகரத்தில் மீண்டும் காலம் அரும்ப விழ்த்துப் பூத்தது ஒரு நாள் மலர் திருவிழாக் கோலங்கொண்ட பேரூர்க்கு செம்பொன் நிறை * சுடர்க்குடம் எடுத்துச் சோதிக்கதிர் விரித்தாற்போல் கிழக்கு வானத்தில் பகல் செய்வோன் புறப்பட்டான். முதல் நாள் இரவில் சற்றே அடக்கமும் அமைதியும் பெற்று ஓய்ந்திருந்த இந்திர விழாவின் கலகலப்பும், ஆரவாரமும் அந்தப் பெருநகரின் ஒவ்வொரு பகுதியிலும் எழுந்தன. காலைப் போதுதானே இந்த ஆரவாரங்களை நகரின் எல்லா இடமும் அடையமுடியும்? மாலையானால்தான் எல்லா அழகுகளையும், எல்லாக் கலகலப்பையும் கடற்கரை கவர்ந்து கொண்டு விடுமே!

மாபெரும் இந்திரவிழாவின் இரண்டாவது நாட்காலை நேரம் இவ்வளவு அழகாக மலர்ந்து கொண்டிருந்த போதுதான் முல்லையின் பொலிவுமிக்க சிரிப்பும் இளங்குமரனின் பார்வையில் மலர்ந்தது. சிரிப்பினால் முகத்துக்கும், முகத்தினால் சிரிப்புக்கும் மாறி மாறி வனப்பு வளரும் முல்லையின் வளைக்கரங்கள்தான் அன்று காலை இளங்குமரனை உறக்கத்திலிருந்து எழுப்பின. கண்ணிலும், நகையிலும் நகை பிறக்குமிடத்திலுமாகக் கவர்ச்சிகள் பிறந்து எதிர் நின்று காண்பவர் மனத்துள் நிறையும் முல்லையின் முகத்தில் விழித்துக் கொண்டேதான் அவன் எழுந்தான். பெண்கள் பார்த்தாலும், நகைத்தாலும், தொட்டாலும், சில பூக்கள் மலர்ந்து விடும் என்று கவிகள் பாடியிருப்பது நினைவு வந்தது இளங்குமரனுக்கு. ‘மலர்ச்சி நிறைந்த பொருள்களினால் மற்றவற்றிலும் மலர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/43&oldid=1141644" இலிருந்து மீள்விக்கப்பட்டது