பக்கம்:மணி பல்லவம் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

43

உண்டாகும் என்ற விளக்கம் எவ்வளவு பொருத்தமானது! பெண்களின் பார்வைக்கும், புன்னகைக்கும் பூக்கள் மலர்வது மெய்யுரையோ, புனைந்துரையோ? ஆனால் ஆறறிவு பெற்ற மனிதமனங்களே மலர்ந்து விடுகின்றனவே! எத்தனையோ குழப்பங்களுக்கிடையே இந்தப் பேதைப் பெண் முல்லை தன் நோக்கினாலும் நகைப்பினாலுமே என் மனத்தை மலர வைக்கிறாளே! இந்த அற்புத வித்தை இவளுக்கு எப்படிப் பழக்கமாயிற்று,’ என்று தனக்குள் எண்ணி வியந்தவாறே காலைக் கடன்களைத் தொடங்கினான் இளங்குமரன்.

அருட்செல்வ முனிவர் கட்டிலில் அயர்ந்து படுத்திருந்தார். இளங்குமரனும், முல்லையும் அவரை எழுந்திருக்கவிடவில்லை. எவ்வளவு தளர்ந்த நிலையிலும் தம்முடைய நாட்கடன்களையும், தவவழிபாடுகளையும் நிறுத்தியறியாத அந்த முனிவர் பெருந்தகையாளர், “என்னை - எப்படியாவது எனது. தவச்சாலையிலே கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்” என்று அன்றும் பிடிவாதமாக மன்றாடிப் பார்த்தார். இளங்குமரனும், முல்லையும்தான் அவரை வற்புறுத்தி ஓய்வு கொள்ளச் செய்திருந்தனர். உடல் தேறி நலம் பெறுகிறவரை முனிவர் அந்த வீட்டிலிருந்து வெளியேறலாகாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டதுபோல் சொல்லிவிட்டார் முல்லையின் தந்தையாகிய வீரசோழிய வளநாடுடையார். அனுபவமும் வயதும் நிறைந்த மூத்த அந்தப் பெருங்கிழவரின் குரலில் இன்னும் கம்பீரமும் மிடுக்கும் இருந்தன. சோழநாட்டின் பெரிய போர்களில் எல்லாம் கலந்து தீர அனுபவமும் வீரப் பதவிகளும் பெற்று நிறைய வாழ்வு வாழ்ந்து ஓய்ந்த உடல் அல்லவா அது? இன்று ஒடுங்கித் தளர்ந்திருந்தாலும் வெளுத்து நரைத்த வளமான மீசையும், குழிந்திருந்தாலும் ஒளி மின்னும் கண்களும், நெடிதுயர்ந்த தோற்றமும் அவருடைய பழைய வீரவாழ்வை நினைவிற் கொண்டு வருவதற்குத் தவறவில்லை. ஒரு காலத்தில் வீர சோழிய வளநாடுடையார் என்ற அந்தப் பெயர் ஆயிரம் வீரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/44&oldid=1141645" இலிருந்து மீள்விக்கப்பட்டது