பக்கம்:மணி பல்லவம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மணிபல்லவம்

தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த இளைஞனே ஓவியம் போல் கவர்ச்சியாக இருப்பதை எண்ணி வியந்தவனாக அவனை நோக்கிக் கேள்விகளைத் தொடுக்கலானான் இளங்குமரன்:

“உன் பெயர் என்னவென்று நான் அறியலாமா, தம்பி?”

“ஐயா! இந்த ஏழை ஓவியனை மணிமார்பன் என்று அழைப்பார்கள்.”

“உன் மார்பில் அப்படி ஒன்றும் மணிகளைக் காணவில்லையே அப்பனே?” இளங்குமரன் குறும்பு. நகையுடன் இப்படிக் கேட்டபோது, அந்த இளம். ஓவியன் சிறிது நாணமடைந்தது போல் தலைகுனிந்தான். பின்பு மெல்லச் சொல்லலானான்:

“ஐயா! நீங்கள் மனம்வைத்தால் இந்த ஏழையினுடைய மார்பிலும் மணிகள் ஒளிரச் செய்ய முடியும்.” இதைக் கேட்ட இளங்குமரன் அலட்சியமாகச் சிரித்தான்.

“என்னைப் பற்றித் தப்புக் கணக்குப் போடுகிறாய். தம்பி! பட்டினப்பாக்கத்தில் எவரோ பெருஞ் செல்வரின் மகன் என்றோ, வேறு விதமான பெரிய இடத்துப்பிள்ளை என்றோ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் இந்தக் கணமே அந்த நினைவை விட்டுவிடு மணிமார்பா. என் சித்திரத்தை நன்றாக எழுதிக் காண்பித்தால். அதை வாய் நிறையப் புகழ்வதைத் தவிர வேறு எந்தப் பரிசும் தரமுடியாதவன் நான்.”

“நீங்கள் பரிசு ஒன்றும் எனக்குத் தரவேண்டியதில்லை ஐயா! உங்கள் படத்தை நான் வரைந்து போய்க் கொடுத்தாலே எனக்கு உடனே கனகாபிஷேகம் செய்துவிடக் காத்திருக்கிறவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்களே!”

இப்படிக் கூறிவிட்டு நளினமானதொரு மென்னகை இதழ்களில் இழையோட இளங்குமரன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் மணிமார்பன். இதைக் கேள்வியுற்ற இளங்குமரனுக்குத் திகைப்பும், வியப்பும் ஒருங்கு உண்டாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/53&oldid=1141667" இலிருந்து மீள்விக்கப்பட்டது